ஆனையிறவில் 3 ஆயிரம் சிங்கள ராணுவத்தினரை கருணா இப்படி செய்தாரா..?


3 ஆயிரம் சிங்கள ராணுவத்தினரை கொலை செய்ததாக விடுதலைப்புலிகள் இயக்க முன்னாள் துணைத்தலைவர் கருணா கூறியது பற்றி இலங்கை போலீஸ் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

விடுதலைப்புலிகள் இயக்கத்தில் துணைத்தலைவராக இருந்தவர் கருணா என்ற விநாயகமூர்த்தி முரளீதரன். இவர், விடுதலைப்புலிகள் மேலிடத்துடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, கடந்த 2004-ம் ஆண்டு, கிழக்கு மாகாண போராளிகளுடன் இயக்கத்தில் இருந்து விலகினார்.

தனி அரசியல் கட்சி ஒன்றையும் தொடங்கினார். விடுதலைப்புலிகள் இயக்கம் வீழ்ச்சி அடைந்த பிறகு, 2010-ம் ஆண்டு ராஜபக்சே கட்சியில் இணைந்தார். அதன்மூலம் எம்.பி. ஆகி, துணை மந்திரியாக பதவி ஏற்றார்.

தற்போது, இலங்கை பாராளுமன்ற தேர்தல் ஆகஸ்டு 5-ந் தேதி நடக்கிறது. அதில், அகில இலங்கை திராவிட மகாசபா என்ற கட்சி சார்பில் கிழக்கு மாகாணத்தில் உள்ள டிகாமடுல்லாவில் கருணா போட்டியிடுகிறார்.


இதையொட்டி, கடந்த வாரம், தேர்தல் பிரசார பொதுக்கூட்டம் ஒன்றில் கருணா பங்கேற்று பேசினார். அவர் பேசியதாவது:-

நான் விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்தபோது, ஆனையிறவில் நடந்த சண்டையில், ஒரே இரவில், 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரம்வரையிலான சிங்கள ராணுவத்தினரை கொன்றேன். கிளிநொச்சியில்தான் அதிக படையினரை கொலை செய்தேன்.

இலங்கையில் கொரோனாவால் ஏற்பட்ட உயிர்ப்பலியை விட இது அதிகம்தான். இவ்வாறு அவர் பேசினார்.

கருணாவின் இந்த பேச்சு, இலங்கையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவரது கருத்தின் உண்மைத்தன்மை பற்றி குற்ற புலனாய்வு துறை விசாரணைக்கு இலங்கையின் தற்காலிக போலீஸ் துறை தலைவர் சாந்தனா விக்ரமரத்னே உத்தரவிட்டுள்ளார். இத்தகவலை இலங்கை ராணுவ அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

இந்த தேர்தலில், ராஜபக்சே கட்சியுடன் கருணா கட்சி கூட்டணி அமைத்திருப்பதாக கருதப்பட்டது.

ஆனால், கருணா பேச்சால் தர்மசங்கடம் அடைந்துள்ள ராஜபக்சே கட்சி, தங்கள் கூட்டணியில் கருணா கட்சி இல்லை என்று அதிகாரபூர்வமாக மறுத்துள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!