ஹோண்டுராஸ் – கேமேன் கடலில் சக்திவாய்ந்த திடீர் நிலநடுக்கம்: சுனாமி எச்சரிக்கை..!


மத்திய அமெரிக்க நாடான ஹோண்டுராஸ் நாட்டின் கடற்பகுதியில் நேற்று இரவு (இந்திய நேரப்படி இன்று காலை) சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ஹோண்டுராஸ் – கேமேன் தீவுகளுக்கு இடையே உருவான இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.6 அலகாக பதிவாகி இருப்பதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இந்த நிலநடுக்கம் ஹோண்டுராசின் பாரா பட்டுகா நகரில் இருந்து 202 கி.மீ. வடக்கு-வடகிழக்கில் கடலுக்கடியில் 10 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நிலநடுக்கம் காரணமாக வீடுகள் மற்றும் கட்டிடங்கள் கடுமையாக குலுங்கின. ஒரு சில பகுதிகளில் உள்ள வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. பொதுமக்கள் வீடுகளை விட்டு அலறியடித்துக் கொண்டு வெளியேறினர். இதன் பாதிப்பு குறித்த விவரங்கள் எதுவும்வெளியாகவில்லை.


ஹோண்டுராஸ் முழுவதும் அவசரகால மீட்பு குழுவினர் தயார் நிலையில் இருப்பதால் பொதுமக்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என ஜனாதிபதி கேட்டுக்கொண்டுள்ளார்.

எனினும், போர்ட்டோ ரிகோ, கியூபா, ஜமைக்கா மற்றும் மத்திய அமெரிக்க கடற்பகுதியில் உள்ள தீவுகளில் சுனாமி ஆபத்து உள்ளதாக அமெரிக்காவின் தேசிய சுனாமி எச்சரிக்கை மையம் எச்சரித்துள்ளது. கடலோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெளியேற வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டது.

பின்னர் சில மணி நேரத்தில் சுனாமி எச்சரிக்கை திரும்ப பெறப்பட்டது. ஆனால், ஒரு சில இடங்களில் ஒரு மீட்டர் உயரத்துக்கும் மேல் கடலில் அலைகள் உருவாகலாம் என தெரிவிக்கப்பட்டது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!