ஊருக்குள் புகுந்த 15 அடி நீள ராஜநாகம்; மக்கள் அலறியடித்து ஓட்டம்


ஆந்திர பிரதேசத்தில் வன பகுதியில் இருந்து 15 அடி நீள ராஜநாகம் ஒன்று கிராமத்திற்குள் புகுந்ததில் அப்பகுதி மக்கள் அச்சத்தில் அலறியடித்து ஓடினர்.

நாடு முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு அமலில் உள்ள நிலையில், நகர்ப்புற மற்றும் கிராமப்புற மக்கள் வீடுகளை விட்டு வெளியே வர தடை நீட்டிக்கப்பட்டு உள்ளது. ஆந்திர பிரதேசத்தில் 3 ஆயிரத்து 110 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. 1,896 பேர் சிகிச்சை முடிந்து சென்றுள்ளனர். 56 பேர் கொரோனா பாதிப்புக்கு பலியாகி உள்ளனர்.

ஆந்திர பிரதேசத்தின் செருக்குப்பள்ளி வனப்பகுதியில் விலங்குகள், ஊர்வன போன்றவை வசித்து வருகின்றன. பாதுகாக்கப்பட்ட வன பகுதியில் இருந்து 15 அடி நீளம் கொண்ட ராஜநாகம் ஒன்று திடீரென வெளியேறி உள்ளது.

அது, விசாகப்பட்டின மாவட்டத்தில் தம்மடப்பள்ளி என்ற கிராமத்திற்குள் புகுந்துள்ளது. இதனால் அந்த பகுதியில் வசித்து வரும் கிராம மக்கள் அச்சத்தில் அலறியடித்து கொண்டு ஓடினர்.

இதன்பின்பு தகவல் அறிந்து வன பாதுகாவலர்கள் மற்றும் உள்ளூர் பாம்பு பிடி வீரர் ஒருவர் உதவியுடன் பாம்பு பிடிக்கப்பட்டது. பின்னர் செருக்குப்பள்ளி வன பகுதியில் கொண்டு சென்று ராஜநாகம் விடப்பட்டது.

உலகிலேயே மிக நீள, மனிதர்களை கொல்லும் அதிக விஷம் கொண்டவையாக ராஜநாகம் உள்ளது. இவை பிற பாம்புகளையும் உணவாக உட்கொள்ளும். இந்த வகை பாம்புகள் கடித்து விட்டால் அதில் இருந்து பிழைக்க மருந்து எதுவும் இல்லை.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!