வங்க கடல் பகுதியில் 16ந்தேதி புயல் உருவாக வாய்ப்பு… எச்சரிக்கை தகவல்


தெற்கு வங்க கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் செய்தியாளர்களிடம் இன்று கூறும்பொழுது, தெற்கு வங்க கடல் மற்றும் அதனையொட்டிய அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி உள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி வரும் 15ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக உருப்பெறும்.

இதன்பின்னர் 16ந்தேதி காற்றழுத்த தாழ்வு மண்டலம் புயலாக வலுப்பெறும் என கூறினார். இந்த புயலுக்கு ஆம்பன் என பெயரிடப்பட கூடும்.

இதனால், 15ந்தேதி 45 முதல் 55 கி.மீ. வேகத்திலும், 16ந்தேதி 55 முதல் 65 கி.மீ. வேகத்திலும் மற்றும் 17ந்தேதி 65 முதல் 75 கி.மீ. வேகத்திலும் காற்று வீச கூடும் என தெரிவித்து உள்ளார்.

புயல் உருவாக வாய்ப்பு உள்ள சூழலில் வரும் 15, 16 மற்றும் 17 ஆகிய தேதிகளில் வங்க கடல் பகுதிக்கு மீனவர்கள் யாரும் மீன்பிடிக்க செல்ல வேண்டாம் என்று எச்சரிக்கையும் விடப்பட்டு உள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!