திருமணமாகி நாலே 4 மாசம்தான்.. கண் நிறைய தெரிவது சோகமல்ல.. வைரலாகும் வீர பெண்!


இறுக்கமான முகம்.. கண்களில் ஒரு சொட்டு நீர் இல்லை.. தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த கணவரின் உடலையே சோகத்துடன் பார்த்தவாறு இருந்த புது மனைவியின் போட்டோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ளது. ஆனால் அந்தப் பெண்ணின் முகத்தில் அத்தனை தன்னம்பிக்கை தெறிக்கிறது.

கொரோனாவைரஸ்கூட அடங்கிவிடும்.. நம் எல்லையில் நடக்கும் தீவிரவாத தாக்குதலுக்கு ஒரு முடிவே இல்லாமல் போய் கொண்டிருக்கிறது. கடந்த சனிக்கிழமை காஷ்மீர் மாநிலம் ஹந்த்வாரா பகுதி செக் போஸ்ட்டில் டியூட்டியில் இருந்த ராணுவ வீரர்கள் மீது திடீரென சரமாரி துப்பாக்கி சூட்டினை தீவிரவாதிகள் நடத்தினர்.. இதில் 5 வீரர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இதில் ஒருவர்தான் அனூஜ் சூட்… ஹரியானா மாநிலத்தை சேர்ந்தவர்.. இவரது வீரமரணத்துக்கு உரிய மரியாதை செலுத்தப்பட்டு அடக்கமும் செய்யப்பட்டது. ஆனால் இந்த இறுதிசடங்கில் நடந்த 2 விஷயம் அனைவரையும் மலைக்க வைக்கிறது.

மகனின் மரணம் குறித்து அனூஜ் சூட்டின் தந்தை சொல்லும்போது, “என் மகன், மகள் இருவரையும் என் நாட்டுக்காக பணிபுரிய அனுப்பினேன்… என் குழந்தைகள் ராணுவத்தில் வேலை பார்க்கிறார்கள்.. தாய்நாட்டை பாதுகாக்கிறார்கள் என்பதை நினைத்து நிறைய நேரங்களில் நான் மனசார பெருமைப்பட்டிருக்கிறேன்.. அனூஜ்-க்கு 12 வயசிலேயே ராணுவ வீரராக வேண்டும் என்று ஆசை.. அவனுக்கு எப்பவுமே நாட்டை பத்தின பேச்சுதான்.

2008ம் வருஷம் முதன்முதலில் ராணுவ டிரஸ்ஸில் அவனை பார்க்கும்போது எனக்கு எவ்வளவு பெருமையா இருந்ததோ, அந்த அளவுக்கு அவனது சடலத்தையும் பெருமையுடன் பார்க்கிறேன்.. இந்த தாய்நாட்டை காக்க உயிரை தந்திருப்பதால், நான் அழவே மாட்டேன்.. வீர வணக்கம் செலுத்த வேண்டிய நேரமிது.” என்றார்.

ஒரு தந்தை இவ்வளவு அழுத்தமான வார்த்தைகளை சொல்வது பிரமிப்பாக உள்ளது.. மகன் நாட்டுப்பற்றைவிட இது அதற்கு மேல் ஒரு பற்றாக தோன்றியது.. அந்த சமயத்தில் அக்ரித்தி கணவனின் உடல் அருகில் உட்கார்ந்திருந்தார்.. இளம் மனைவி.. கல்யாணம் ஆகி 4 மாதமே என்பதால், இனிமையான தருணங்கள் நிச்சயம் அவர் மனசில் அலைபாயும்.. திருமணம் முடிந்து ஒரு சில நாட்களில் மீண்டும் கணவன் பணிக்கு சென்றுவிட்டார்.. சீக்கிரம் வருவதாக சொல்லவும் அந்த நம்பிக்கையில்தான் அக்ரித்தி காத்து கிடந்தார்.

மனதில் என்னென்ன ஆசைகள், எதிர்பார்ப்புகள், கனவுகளை வைத்திருந்தாரோ அவ்வளவும் நொறுங்கிவிட்டது.. ஆனால் அக்ரத்தி அழவில்லை… சடலத்தை பார்த்து கதறவில்லை.. கணவன் உடலை பார்த்து உட்கார்ந்திருக்கிறார்.. இந்த போட்டோதான் இணையத்தில் வைரலாகி வருகிறது.. மனசு முழுக்க புயலென எழும் குமுறல்களை உணர முடிகிறது.

கணவனின் மரணத்தை மனவலிமையுடன் இவர் எதிர்கொள்கிறார் என்றாலும், இந்த இழப்புக்கு யாராலும் ஈடு செய்ய முடியாது.. தாங்க முடியாத வேதனை, வலிகள் எவ்வளவோ இருந்தாலும், அக்ரத்தி கணவன் மீது வைத்துள்ள காதல் பிரமிக்கத்தக்கது.source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!