காரின் பேனட்டில் போலீஸ் அதிகாரியை இழுத்துச் சென்ற டிரைவர்..!


பஞ்சாப் மாநிலத்தில் கார் டிரைவர் ஒருவர், சோதனை செய்ய முயன்ற போலீஸ் அதிகாரியை காரின் பேனட்டில் இழுத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

பஞ்சாப் மாநிலத்தில் ஊரடங்கு விதிமுறைகளை மீறியும், உரிய அனுதிச் சீட்டு இல்லாமலும் சாலைகளில் சுற்றித் திரியும் நபர்கள் மீது போலீசார் நடவடிக்கை எடுக்கின்றனர். அவசர பயணங்களுக்கான அனுமதி சீட்டு வைத்திருப்போரை மட்டும் வாகனங்களில் செல்ல அனுமதிக்கின்றனர். இதற்காக முக்கிய சாலை சந்திப்புகளில் போலீசார் தொடர்ந்து வாகன சோதனை நடத்தி வருகின்றனர்.

அவ்வகையில், ஜலந்தர் நகரின் மில்க் பார் சவுக் பகுதியில் இன்று காலை பணியில் ஈடுபட்டிருந்த போலீசார், அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தும்படி சைகை காட்டினர். ஆனால் அந்த கார் டிரைவர் நிறுத்துவதுபோல் பிரேக் போட்டு, தப்பிக்கும் முயற்சியாக திடீரென வேகமெடுத்தார்.

அப்போது காரின் முன்னால் நின்றிருந்த உதவி சப்-இன்ஸ்பெக்டர், காரின் பேனட் மீது ஏறி தொற்றிக்கொண்டார். ஆனாலும், டிரைவர் காரை நிறுத்தாமல் வேகமாக சென்றார். இதையடுத்து மற்ற போலீஸ்காரர்கள் அந்த காரை துரத்திச் சென்றனர்.

இதனால் சிறிது தூரம் போலீஸ் அதிகாரியை பேனட்டில் வைத்து இழுத்துச் சென்றபிறகு காரை நிறுத்தினார். கொஞ்சம் அஜாக்கிரதையாக உதவி சப்-இன்ஸ்பெக்டர் இருந்திருந்தால் அவரது உயிருக்கே ஆபத்து ஏற்பட்டிருக்கும்.

வாகன சோதனைக்கு ஒத்துழைப்பு கொடுக்காமல் அத்துமீறி நடந்து கொண்ட கார் டிரைவரை போலீசார் விசாரணைக்கு அழைத்துச் சென்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!