மாறும் மக்களின் ரசனை- பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு ஆர்டர் செய்யப்படும் கொரோனா கேக்


காலத்துக்கேற்ப மாறும் மக்களின் ரசனையாக, தற்போது பிறந்தநாள் கொண்டாட்டங்களுக்கு கொரோனா வடிவிலான கேக் ஆர்டர் செய்யப்படுகிறது. இதனை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டும் மக்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்துகிறார்கள்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மக்கள் வீடுகளிலேயே முடங்கி இருக்கிறார்கள். பாரம்பரிய விளையாட்டுகள் விளையாடியும், நண்பர்கள் மற்றும் தூரத்து உறவினர்களுடன் செல்போனில் பேசியும் அலவலாவி மகிழ்கிறார்கள்.

ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான உணவுகள் சமைத்து சாப்பிடுவதோடு, அதை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு மகிழ்ச்சி அடைகிறார்கள்.

காலத்துக்கேற்ப மக்களின் ரசனைகள் மாறுவது போல, தற்போது கொரோனா வடிவில் வடை தயாரிப்பது, நூடூல்ஸ் செய்வது என விதவிதமான அணுகுமுறைகளை பொதுமக்கள் கையாண்டு வருகிறார்கள். அந்தவகையில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ள இந்த காலகட்டத்தில் பிறந்தநாள் கொண்டாடுவோர் அடம்பிடித்து ‘கொரோனா கேக்’ ஆர்டர் செய்து வருகிறார்கள். இது தற்போதைய புதிய டிரெண்டாக பார்க்கப்பட்டு வருகிறது.

பொதுவாக விலங்குகள், பறவைகள், பூச்சிகள் மற்றும் தமிழ் எழுத்துகள் என பல்வேறு வடிவங்களில், பல்வேறு சுவைகளில் விலைக்கேற்ப கேக்குகள் வடிவமைக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் ஊரடங்கு காலத்தில் பேக்கரிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்ட பிறகு, சிலர் விளையாட்டாக கொரோனா வடிவில் கேக் தயாரித்து அதை அறிமுகப்படுத்தினார்கள்.

இது மக்கள் மத்தியில் அதுவும் குறிப்பாக சிறுவர், சிறுமிகள் மனதில் விருப்பத்திற்குரிய ஒன்றாக அமைந்துவிட்டது. இதனால் இக்காலகட்டத்தில் பிறந்தநாள் கொண்டாடும் சிறுவர்-சிறுமியர் தங்கள் பெற்றோரிடம், ‘எனக்கு கொரோனா கேக் தான் வேண்டும்’ என அடம்பிடிக்கின்றனர்.

வேறுவழியின்று பெற்றோரும் சம்மதிப்பதால் தற்போது ‘கொரோனா கேக்’ ஆர்டர் அதிகரித்து உள்ளது. வீடுகளிலும் இல்லத்தரசிகள் சிலர் கேக் தயாரித்து விற்பனை செய்கிறார்கள். அவர்களிடமும் கொரோனா கேக்குக்கான ஆர்டர்கள் குவிந்து வருகின்றன.

இதுகுறித்து மேடவாக்கத்தை சேர்ந்த இல்லத்தரசி ஸ்டெல்லா ஆரோன் கூறியதாவது:-

நான் கடந்த 3 வருடங்களாக ஆர்டரின் பேரில் வீட்டிலேயே கேக் தயாரித்து வழங்கி வருகிறேன். எனது அனுபவத்தில் பிரியாணி, ரசகுல்லா, இட்லி என பல்வேறு வடிவங்களில் கேக் தயாரித்துள்ளேன். ஆனால் தற்போது ‘கொரோனா கேக்’ தயாரித்து தருமாறு ஆர்டர்கள் வருகின்றன. கொரோனா வைரஸ் போல அந்த கேக்கை வடிவமைப்பது ஒரு புதுமையான அனுபவம். நீலநிறத்தில் கேக்கும், சிவப்பு நிறத்தில் பாண்டன்ட் சேர்த்து இந்த கேக்கை வடிவமைக்கிறோம்.

காலை தொடங்கினால் மதியத்துக்குள்ளாகவே இந்த கேக்கை வடிவமைத்து விடலாம். குழந்தைகள் தற்போது கொரோனா கேக்கை அடம்பிடித்து கேட்கிறார்கள். கொரோனா கேக் தயாரிப்பது ஒரு மாறுபட்ட அனுபவம்தான்.

இவ்வாறு அவர் கூறினார்.

அந்தவகையில் பிறந்தநாளில் கொரோனா கேக் வெட்டி, அந்த காட்சியை சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர். ‘கொரோனாவை வெட்டி விட்டோம்’ என்று உற்சாகத்தில் ஆர்ப்பரிக்கவும் செய்கிறார்கள்.

மனம் இடம் கொடுக்காவிட்டாலும் குழந்தைகளின் சந்தோஷத்துக்காக பெற்றோரும் கொரோனா வடிவிலான கேக்கை வாங்கி தருகிறார்கள். இதற்கு காலத்துக்கேற்ப மாறும் ரசனைதான் காரணம். அந்தவகையில் இது ஒரு புது அனுபவமே.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!