வடகொரியாவுக்கு மருத்துவர்களை அனுப்பிய சீனா.. கிம் ஜோங் நிலை என்ன..?


வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் உடல்நிலை மிக மோசமாக இருப்பதாக இன்று காலையில் இருந்து மீண்டும் செய்திகள் வெளியான வண்ணம் இருக்கிறது. இன்று காலையில் இருந்து அவரின் உடல் நிலை குறித்து முக்கியமான பல செய்திகள் வெளியாகி வருகிறது.

வடகொரியா அதிபர் கிம் ஜோங் உன் உடல் நிலை குறித்து கடந்த ஒரு வாரமாகவே நிறைய செய்திகள், வதந்திகள் வெளியாகி வந்தது. அவர் மிக மோசமான உடல்நிலையுடன் இருப்பதாக அமெரிக்கா செய்தி ஊடகமான சிஎன்என் செய்தி வெளியிட்டு இருந்தது.

அவரின் உடல்நிலை மோசமடைந்து இருக்கிறது, இதய அறுவை சிகிச்சை ஒன்றின் காரணமாக அவரின் உடல்நிலை மிக மோசமாக உள்ளது என்று செய்தி வெளியிட்டு இருந்தது.

அது ஏன்.. ரொம்ப தூரத்தில் உள்ள மருத்துவமனையில் ஆபரேஷன் பண்ணிக்கிட்டார் கிம்.. என்ன காரணம்?

4 நாட்களுக்கு முன் வெளியான இந்த செய்தியில் அவரின் உடல்நிலை நலிவடைந்து வருகிறது என்று கூறப்பட்டது. அதோடு கிம் ஜோங் உன் மூளை சாவு அடைந்துவிட்டதாக கூட உறுதிப்படுத்தப்படாத செய்திகள் வேறு செய்தி நிறுவனங்கள் மூலம் வெளியிடப்பட்டு வந்ததும் குறிப்பிடத்தக்கது. ஆனால் இது தொடர்பாக வட கொரியா ஊடகங்கள் எதுவும் செய்தி வெளியிடவில்லை. வடகொரியா ஊடகங்கள் எதுவும் இதில் செய்தி வெளியிடாமல் அமைதி காத்து வந்தது.

வடகொரிய ஊடகங்கள் இப்படி அமைதியாக இருந்தது மேலும் சந்தேகத்தை அதிகப்படுத்தியது. கிம் ஜோங் உன்னுக்கு கடந்த 12ம் தேதி இதய அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அதன்பின் அவர் வெளியே எங்கும் வரவில்லை. இதனால்தான் இந்த சந்தேகம் அதிகரிக்க தொடங்கி உள்ளது. இவர் தன்னுடைய தனி மாளிகை ஒன்றில் சிகிச்சை பெற்று வருகிறார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருவதாக செய்திகள் வந்தது.

கிம் ஜோங் உன்னின் உடல்நிலை மோசமாகி வருவதாக வெளியாகும் தகவல்களால் சீனா கடும் பதற்றத்தில் இருக்கிறது. சீனா இவரின் உடல்நிலையை தீவிரமாக கண்காணிக்க தொடங்கி உள்ளது. கிம் ஜோங் உன்னிற்கு சீன அதிபர் ஜி ஜின்பிங் மிகவும் நெருக்கம். இந்த நிலையில் இன்று காலை சீனா தனது நாட்டு அதிகாரிகள் மற்றும் மருத்துவர்களை வடகொரியாவுக்கு அனுப்பி வைத்துள்ளது. கிம் ஜோங்கிற்கு சிகிச்சை அளிக்கும் விதமாக சீனா அதிகாரிகளை அனுப்பி உள்ளது.

இன்று ஹாங்காங் ஊடகங்கள் தொடங்கி சில வடகொரியா ஊடகங்கள் வரை கிம் ஜோங் மூளை சாவு அடைந்துவிட்டதாக செய்தி வெளியிட்டு பின் அதை நீக்கியது. அதேபோல் சில தென் கொரிய ஊடகங்கள் கிம் ஜோங் உடல் நிலை மிக மோசமாக இருப்பதாக செய்தி வெளியிட்டது. இதை தொடர்ந்துதான் தற்போது சீனா தனது மருத்துவர்களை வடகொரியாவுக்கு அனுப்பி உள்ளது. இதனால் கிம் ஜோங் உடல் நிலை குறித்து கேள்விகள் எழ தொடங்கி உள்ளது.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!