மர்ம புன்னகை.. அவருக்குள் இவ்வளவா.. அறியபடாத கிம் மனைவியின் மறுபக்கம்


அவர் என்ன ஆனார்.. இருக்காரா போய்ட்டாரா.. எதுவுமே தெரியவில்லை. வட கொரியாவின் சர்வாதிகாரியான கிம் ஜாங் உன் குறித்துத்தான் சொல்கிறோம். அதற்குள் அவரது தங்கை ஆட்சியைப் பிடிக்க தயாராகி விட்டதாகவும் எல்லோரும் பேச ஆரம்பித்து விட்டனர். ஆனால் அவரது மனைவி குறித்து தற்போது உலக மீடியாக்கள் கிண்டிக் கிளற ஆரம்பித்து விட்டன.

காரணம் இருக்கு.. இவரது தங்கை குறித்தே இப்போதுதான் வெளி உலகுக்கு செய்திகள் வெளியாகி வருகின்றன. ஆனால் அதிலும் கூட பெரிய தெளிவான தகவல்கள் இல்லை. இந்த நிலையில் மனைவி குறித்து பெரிய அளவில் செய்திகளே இல்லை. அதுதான் உண்மை.

கிம்மோட தங்கை பெயர் கிம் யோ ஜாங். அதேபோல மனைவி பெயர் ரி சோல் ஜூ. அண்ணனும் தங்கையும் வெளிநாட்டில் அதாவது சுவிட்சர்லாந்தில் ஒன்றாகப் படித்தவர்கள். இருவருக்கும் அப்படி ஒரு பாசப் பிணைப்பு.

கிம் மற்றும் யோவோட தந்தை கிம் ஜாங் இல் மரணமடைந்த சமயத்தில்தான் மகள் யோவோட வெளி உலக வருகை ஆரம்பித்தது என்கிறார்கள். அப்பாவோட பாடி இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டிருந்தது. அப்போது ஓடியாடி அதிகாரிகளுக்குத் தேவையான உத்தரவுகளைப் பிறப்பித்தது மகள் யோதான். கிம் கூட ஒரு ஓரமாகத்தான் இருந்தார். ஆனால் யோ தான் எல்லாவற்றையும் எடுத்துப் போட்டுச் செய்தார். கூடவே அண்ணனுக்கு அவ்வப்போது ஆறுதல் கூறியடியும் இருந்தார்.

அப்பா போன பிறகு கிம் வசம் ஆட்சி வந்தது. அப்போது அண்ணனுக்கு உறுதுணையாக முழுசாக மாறி விட்டார் யோ. மனைவியை விட யோவிடம்தான் அதிகமாக ஆலோசனை கேட்பாராம் கிம். காரணம் தங்கச்சி மீது அப்படி ஒரு நம்பிக்கை. அதேபோல யோவும் அண்ணனுக்கு ஏகப்பட்ட ஆலோசனைகளைக் கூறி அவருக்கு ஆட்சியை முழுமையாக எளிதாக்கியுள்ளார். கிட்டத்தட்ட ராவணன், சூர்ப்பனகை போலத்தான் இவர்களது உறவு.. தங்கைக்காக எதையும் செய்வாராம் அண்ணன். அண்ணனுக்காக எதையும் செய்வாராம் தங்கை.

இந்த அன்பான உறவை சற்று தள்ளி இருந்தபடியே ரசித்துப் பார்த்துக் கொண்டிருப்பவர்தான் ரி சோல் ஜூ.. இவர் மிகப் பெரிய அறிவுஜீவி குடும்பத்திலிருந்து வந்தவர். இவரது அப்பா ஒரு பேராசிரியர். அம்மா ஒரு டாக்டர். மிகவும் வசதியான குடும்பம். ரொம்ப அழகானவர். அருமையாக புன்னகைப்பார். இவரது வசீகரமே இவரது சிரிப்புதான். அந்த சிரிப்பில் மயங்கித்தான் கிம் இவரை காதலித்துக் கட்டிக் கொண்டாராம்.

தன்னை அதிகமாக வெளிக்காட்டிக் கொள்ள விரும்பாதவர் ரி. கணவருக்கு தேவையானதை செய்து கொடுப்பவர். தனது 3 குழந்தைகளையும் அத்தனை பாங்காக பார்த்துப்பாராம். கணவரின் வேலைகளில் தலையிடுவதும் இல்லையாம். குடும்பத்தோடு இருப்பதே அவருக்குப் பிடித்தமானது. அதை கிம்மும் தடுப்பதில்லையாம். அதான் தங்கச்சி இருக்காளே.. என்று அவரும் தைரியமாக தனது வேலைகளில் கவனம் செலுத்துவாராம்.

2011ம் ஆண்டுதான் ரி குறித்து தகவல்களே வெளியுலகுக்கு ஓரளவு தெரிய வந்தது. அதாவது அவரது மாமனார் கிம் ஜாங் இல் மரணமடைந்த சமயத்தில்தான் ரி யின் முகமே வெளியுலகுக்குத் தெரிய வந்தது. நிறைய பேருக்கு அப்போதுதான் அட கிம் ஜாங் உன்னுக்குத் திருமணமாய்ருச்சா என்ற செய்தியே தெரிய வந்தது. அப்படி ஒரு ரகசியமான நாடுதான் வட கொரியா. இவர்களுக்கு 2009ல் கல்யாணம் நடந்துள்ளது. சிலர் 2010 என்று சொல்கிறார்கள். கிம் இதுவரை அது பற்றி பேசியதே இல்லை.

வட கொரியாவைப் பொறுத்தவரை ஆணாதிக்கம் பிடித்த நாடு. அங்கு வீட்டிலும் சரி பொது வெளியிலும் சரி பெண்களுக்கு சம உரிமை கிடையாது. ஆண்களுக்கு அடிமை போலவே அங்கு பெண்கள் நடத்தப்படுகிறார்கள். பெண்களுக்கு அதிகாரமும் கிடையாது. ஆண்கள் சொல்வதை மட்டுமே பெண்கள் செய்ய வேண்டும். அப்படி ஒரு பைத்தியக்கார நாடு. இதன் காரணமாகவே ரி குறித்தோ, யோ குறித்தோ அங்கு இதுவரை எந்த பெரிய தகவலும் வெளியுலகுக்குக் கசிந்ததில்லை.

ரி ஆரம்பத்தில் ஒரு சியர் லீடராக இருந்துள்ளார். விளையாட்டுப் போட்டி ஒன்றில் அவரைப் பார்த்து மெய் மறந்து போன கிம் அவரை காதலிக்க ஆரம்பித்தார். ரியும் தனது சம்மதத்தைச் சொல்ல அவர்கள் கணவன் மனைவியாகியுள்ளனர். இந்தத் திருமணத்தை தனது தந்தை இல்லின் சம்மதத்துடன்தான் நடத்தியுள்ளார் கிம். தந்தை மீது அவ்வளவு மரியாதை. மிகவும் இளம் வயதிலேயே ரியை மணந்து கொண்டுள்ளார் கிம்.

ரி பன்முகத் திறமையானவர். நல்லா பாடுவாராம். டான்ஸ் சூப்பரா ஆடுவாராம். அதேபோல வீட்டு வேலைகளிலும் கெட்டி. குடும்பத்தை நிர்வகிப்பதிலும் சூப்பர் திறமைசாலியாம். சீனாவில் இசை குறித்த படிப்பை படித்துள்ளாராம். இவர் வட கொரியாவில் உள்ள உன்ஹாசு ஆர்கெஸ்ட்ரா என்ற இசைக் குழுவிலும் பாடி வந்துள்ளார். பின்னர் இந்த குழுவைச் சேர்ந்த அனைவரையும் கிம் சுட்டுக் கொன்று விட்டாராம். என்ன காரணம் என்று தெரியவில்லை. ஆனால் இதில் யாராவது கிம்மின் மனைவியிடம் ஏதாவது வாலாட்டியிருக்கலாம் என்று கிசுகிசுக்கப்படுகிறது.

2018ல் தனது மனைவியுடன் சீனாவுக்கு விஜயம் செய்திருந்தார் கிம். அப்போது ரி போட்டிருந்த டிரஸ் படு சூப்பராக இருந்தது. அப்படி ஒரு அப்ளாஸை அவர் வாரிக் குவித்தார். சீன மீடியங்கள் கிம்மை விட்டு விட்டு ரியைப் பற்றியே நிறைய எழுதித் தள்ளின. அவரது புகைப்படங்கள் வைரலாகின. இப்படி ஒரு அழகு தேவதையா கிம்முக்கு என்று அத்தனை பேரும் வாய் பிளந்து போயினர். ஹாங்காஹ் பேஷன் உலகமே விழுந்து விழுந்து ரி குறித்து பேசி சிலாகித்தது. இவர் ஒரு ஸ்டைல் ஐகான் என்றும் புகழ்ந்து தள்ளினர்.

தற்போது கிம்மின் நிலை என்ன என்று தெரியவில்லை. ரி எங்கிருக்கிறார் என்றும் தெரியவில்லை. அடுத்து ஆட்சியைப் பிடிக்கப் போவது யோ என்றுதான் சொல்லப்படுகிறது. இந்த சமயத்தில் ரி அதிரடியாக உள்ளே புகுவாரா அல்லது நாத்தனாருக்கு விட்டுக் கொடுத்து விட்டு ஒதுங்கிக் கொள்வாரா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!