கொரோனாவை கண்டறிய புதிய தொழில்நுட்பம் – மும்பை மாணவர்கள் அசத்தல் சாதனை..!


ஸ்மார்ட் போனை பயன்படுத்தி கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான புதிய தொழில்நுட்பத்தை மும்பை மாணவர்கள் கண்டுபிடித்து சாதனை படைத்துள்ளனர்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் நோயாளிகளை கண்டறியும் பரிசோதனை வசதிகள் போதாது!

– இதுதான் கொரோனா வைரசுக்கு எதிராக இந்தியா நடத்தி வருகிற மாபெரும் யுத்தத்தில் காங்கிரஸ் கட்சியின் இளம் தலைவர் ராகுல்காந்தி தொடர்ந்து முன்வைக்கிற குற்றச்சாட்டாக அமைந்திருக்கிறது.

அவர் அப்படிச் சொல்வதற்கு காரணம் இருக்கிறது.

இந்தியாவில் கொரோனா வைரஸ் இருக்கிறதா? என கண்டறிய வேண்டுமென்றால், 10 லட்சம் பேரில், 149 பேருக்கு பரிசோதனை செய்கிற அளவுக்குத்தான் பரிசோதனைக்கருவி வசதி (டெஸ்டிங் கிட்ஸ்) இருக்கிறது என்பது அவரது கருத்தாக இருக்கிறது…!

அது மட்டுமல்ல, இந்த வகையில், உலகின் அடிமட்டத்தில் உள்ள லாவோஸ் (157). நைஜர் (182), ஹோண்டுராஸ் (162) நாடுகளைப் போல இந்தியாவும் இருக்கிறது, எனவே இங்கே பரிசோதனை வசதிகளைப் பெருக்க வேண்டும் என்று அவர் தொடர்ந்து ஓங்கிக்குரல் கொடுத்து வருகிறார்.

பொதுவாக கொரோனா வைரசை கண்டறிவதற்கு இங்கே ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை, ரேபிட் ஆண்டிபாடி பரிசோதனை ஆகிய 2 பரிசோதனைகள் செய்யப்படுகின்றன.

இந்த பரிசோதனைகள், ஒருவரின் சுவாச குழாயில் இருந்து எடுக்கப்படுகிற மாதிரி, தொண்டையில் இருந்து எடுக்கப்படுகிற மாதிரி, மூக்கின்பின்புறம் உள்ள நாசியோபாரிங்கல் பகுதியில் இருந்து எடுக்கப்படுகிற மாதிரி ஆகியவற்றை கொண்டு கண்டறியப்படுகிறது.

இதற்கு கூடுதல் செலவு ஆகிறது என்பதுடன், முடிவை அறிய நீண்ட நேரம் பிடிக்கிறது.

இந்த நிலையில்தான் கொரோனா வைரஸ் தொற்றை கண்டறிவதற்கான மாற்றுவழிமுறைகளை உருவாக்க இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் பலவற்றிலும் விஞ்ஞானிகள் தொடர்ந்து ஆய்வுக்கூடங்களில் அமர்ந்து ஆராய்ச்சிகளை நடத்திய வண்ணம் உள்ளனர்.

இதில் இந்தியா இப்போது ஒரு மைல் கல்லை எட்டி இருக்கிறது. ஒட்டுமொத்த இந்தியர்களும் எழுந்து நின்று அதற்காக ஜோராக கைதட்டலாம்.

இந்தியாவின் நிதித்தலைநகரம் என்ற பெருமைக்குரிய மும்பை மாநகரில் உள்ள டி.ஒய்.பாட்டீல் இன்ஸ்டிடியூட் ஆப் பயோடெக்னாலஜி அண்ட் பயோஇன்பர்மேடிக்ஸின் பேராசிரியர் சந்தோஷ் போத்தே வழி நடத்துதலில், மாணவர் களான ரேஷ்மி சக்கரவர்த்தி, பிரியங்கா சவுகான், பிரியா கார்க் ஆகியோரும் இணைந்து கொரோனா வைரஸ் கண்டறிவதில் ஒரு புதிய தொழில் நுட்பத்தை கண்டுபிடித்திருக்கிறார்கள்.

இவர்கள் காப்புரிமை பெற்ற, ஏ.ஐ. என்று சொல்லப்படக் கூடிய செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான கருவியை கண்டுபிடித்து இருக்கிறார்கள்.

இந்தக் கருவியுடன், ஸ்மார்ட் போனை பயன்படுத்தி, குரல் அடிப்படையிலான சோதனை மூலம் ஒருவருக்கு கொரோனா வைரஸ் தாக்கம் இருக்கிறதா, இல்லையா என்பதை கண்டுபிடித்து விடலாம்.

இந்த கருவி, ஒரு செயலி (ஆப்) மூலம் குரல் அடிப்படையில் ஆய்வு செய்து கொரோனா வைரசை கண்டுபிடித்து விடுகிறது.

இதே போன்று குரல் அடிப்படையில், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, ஒரு கருவியை உருவாக்க வெளிநாட்டு பல்கலைக்கழகங்களை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பலரும் முயற்சி மேற்கொண்டுள்ளனர்.

இந்த தருணத்தில் நமது மும்பை மாணவர்கள் இதைக் கண்டுபிடித்து சாதனை படைத்திருக்கிறார்கள்.

இவர்கள் கண்டுபிடித்துள்ள கருவியை இத்தாலியில் ரோம் நகரில் உள்ள டோர் வெர்கட்டா பல்கலைக்கழகத்தில் சோதனை ரீதியில் பயன்படுத்தி வருகிறார்கள்.

ஏற்கனவே 300 பேருக்கு இந்த கருவியைக்கொண்டு சோதனை நடத்தி இருக்கிறார்கள். இதில் 98 சதவீதம் துல்லியமான முடிவு கிடைத்திருக்கிறது என்பதுதான் மகிழ்ச்சி தரக்கூடிய தகவலாக அமைந்துள்ளது

மாணவர்களின் கண்டுபிடிப்பை மேற்பார்வை பார்த்து வந்த பேராசிரியர் சந்தோஷ் போத்தே இதுபற்றி கூறும் கருத்து இது:-

“வெளிநாட்டு பல்கலைக்கழகங்களில், குரல் அடிப்படை யிலான செயற்கை நுண்ணறிவு கருவியை கண்டுபிடிக்க முயற்சி நடந்து வருகிறது. ஆனால் இந்தியாவில் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள இத்தகைய கருவியானது, வெற்றிகரமான செயல்பாட்டில் இருந்து வருகிறது. இத்தாலியில், கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளை வெற்றிகரமாக கண்டறிய இது பயன்பாட்டில் இருக்கிறது. இதைக் கண்டுபிடித்துள்ள மாணவர்களிடம் நோயாளிகள், மாதிரிகள் என முழு அளவிலான தரவுகளை கொண்ட மென்பொருள் இருக்கிறது.

தற்போது ரோமில் உள்ள பல்கலைக்கழகத்தில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகளை கண்டுபிடிப்பதில் இந்த கருவி வெற்றிகரமாக உதவி வருகிறது”.

இந்த கருவி எப்படி செயல்படுகிறது என்கிறபோது அதற்கு பேராசிரியர் சந்தோஷ் போத்தே கூறும் பதில்:-

“செயலியில் உள்ள மைக்கில் ஒருவர் பேசும்போது, பல்வேறு அளவுருக்களில் குரல் அதிர்வு, சத்தம் விலகல் என பல்வேறு வகைகளில் குரல் உடைகிறது.

இந்த மதிப்பீடுகள், சாதாரண நபர் ஒருவரின் மதிப்பீடு களுடன் ஒப்பிடப்படுகின்றன. அதைத் தொடர்ந்து காப்புரிமை பெற்றுள்ள தொழில் நுட்பம், சம்மந்தப்பட்ட நபருக்கு கொரோனா வைரஸ் தொற்று உள்ளதா, இல்லையா என்பதை கண்டறிகிறது” என்கிறார்.

ரோம் நகரில் இந்த கருவியை சோதனை ரீதியில் பயன்படுத்தி வருகிற டோர் வெர்கட்டா பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ஜியோவானி சாகியோ, “ஆடியோ அடிப்படை யிலான நோய் கண்டறியும் கருவி, சம்மந்தப்பட்ட நபரின் குரலின் சுரத்தில் இருந்து கொரோனா வைரசை கண்டுபிடிக் கிறது” என்று சிலிர்த்துப் போகிறார்.

தொடர்ந்து அவர் சொல்கிறார்.

“ஒவ்வொருவரின் குரலிலும் 6,300 அளவுருக்கள் இருக்கின்றன. ஒரு சில அலகுகள் மட்டுமே, ஒரு டஜனுக்கும் குறைவானவை, தனிநபர்களை குறிக்கின்றன. அவற்றில் சளியைத்தவிர மற்றவற்றை மனித காதுகளால் வேறுபடுத்தி பார்க்க முடிவதில்லை. ஆனால் செயற்கை நுண்ணறிவு எல்லாவற்றையும் கண்டுபிடிக்கிறது.

நமது உள்ளுறுப்புக்கள் ஒவ்வொன்றும், ஒரு ஒத்ததிர்வு கொண்டவை ஆகும். எனவே நம் இதயத்திலோ, நுரையீரலிலோ சிக்கல் இருந்தால், அது நமது குரலில் பிரதிபலிக்கும்.

ஒரே நபருக்கு அவர் ஆரோக்கியமாக இருக்கிறபோது ஒரு குரல் இருக்கும். நோய் இருந்தால் வேறொரு குரல் இருக்கும்.

நுரையீரல் மற்றும் காற்று அலைகளில் கொரோனா வைரஸ் தாக்கத்தை ஏற்படுத்துவதால், குரல் நிச்சயம் பாதிக்கப்படுகிறது. இதை வைத்து கொரோனா வைரசை கண்டறிய முடியும்” என்கிறார் பேராசிரியர் ஜியோவானி சாகியோ.

“கொரோனா வைரஸ் பாதித்தவர்களை முதல் கட்ட பரிசோதனையிலேயே கண்டுபிடிக்க இது உதவும், இந்த சோதனையில் ஒருவருக்கு கொரோனா வைரஸ் பாசிட்டிவ் என்று வந்துவிட்டால், அவர் அடுத்து ஆய்வுக்கூட சோதனைக்கு போனால் போதும்” என்கிறார் இந்த கருவியை கண்டுபிடித்த மாணவி பிரியா கார்க்.

மேலும், “தற்போதைய மருத்துவ உள்கட்டமைப்பு வசதி குறைபாட்டில் உள்ள சிக்கல்களை இது போக்கும். இருப்பிட கண்காணிப்பு ஒருங்கிணைப்பின்மூலம், கொரோனா வைரஸ் தாக்கம் தீவிரமாக உள்ள ஹாட்ஸ்பாட் பகுதிகளை முன்கூட்டியே அடையாளம் காண அரசுக்கு உதவக்கூடும். மேலும் ஸ்மார்ட் போன் வாயிலாக சோதனை செய்வதின் மூலம், நாட்டின் கடைக்கோடி பகுதியையும் இது அடைய முடியும்” என்று விளக்குகிறார் பிரியா கார்க்.

இதன் சிறப்பம்சத்தையும் பிரியா கார்க் விளக்க தவறவில்லை.

“நாட்டின் மருத்துவ உள்கட்டமைப்பும், ஒட்டு மொத்த மருத்துவ சமூகமும், மிகுந்த அழுத்தத்துக்கு ஆளாகிறபோது, நோயாளிகளுக்கும், ஆய்வுக்கூட பரிசோதகருக்கும் எந்த வெளிப்பாடும் இல்லாமல், தொலைதூரத்தில் நோயாளிகளை அடைய இது சிறந்த தீர்வு ஆகும். தற்போதைய சோதனை முறைகளை மாற்றுவதற்கான கருவியை நாங்கள் கண்டறியவில்லை என்றாலும், இந்த சோதனை எளிமையானதாக இருக்கிறபடியால், ஆரம்ப கட்டத்திலேயே கொரோனா வைரஸ் தொற்றுநோய் தாக்கியவர்களை கண்டறிய இது உதவுகிறது. எனவே கொரோனா வைரஸ் பரவுவதும் கட்டுப்படுத்தப்படுகிறது” என்கிறார்.

கண்டுபிடிப்பாளர்களில் இன்னொருவரான ரேஷ்மி சக்கர வர்த்தி, “கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளை செலவே இன்றி அடையாளம் காண்பதற்கு இந்த முறை உதவும். பரிசோதனையை நடத்திவிட்டு, காத்திருக்க தேவையில்லை. சில நிமிடங்களில் கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளை அடையாளம் கண்டு விடலாம். டாக்டர்களை அடுத்த கட்ட சிகிச்சைக்கு ஆடியோ அல்லது வீடியோ மூலமோ கூட தொடர்பு கொண்டு விட முடியும்” என்கிறார்.

தற்போது ரோமில் சோதனை ரீதியில் பயன்படுத்தப்படுகிற கருவி, சீக்கிரமாக அடுத்த ஒப்புதல்களைப் பெற்று வணிக ரீதியில் சந்தைக்கு வருகிறபோது, அது உண்மையிலேயே கொரோனா வைரஸ் பாதித்த நோயாளிகளை எளிதாக கண்டு பிடிக்க உதவும் என்பதில் சந்தேகம் இல்லை. அந்த வகையில் இந்தியாவின் கண்டுபிடிப்பு. உலகத்தின் அங்கீகாரத்தையும் பெறத்தான் போகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!