சொந்த ஊர் திரும்ப முடியாத விரக்தியில் கோவில் பூசாரி விபரீத முடிவு..!


ஊரடங்கு நீட்டிக்கப்பட்டதால் சொந்த ஊர் திரும்ப முடியாத விரக்தியில் கோவில் பூசாரி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்தியாவில் 10 ஆயிரத்து 815 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

வைரஸ் பரவியவர்களில் இதுவரை ஆயிரத்து 190 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்து டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர். மேலும், கொரோனாவுக்கு நாடு முழுவதும் 353 பேர் பலியாகியுள்ளனர்.

இதற்கிடையில், கொரோனா பரவுவதை கட்டுப்படுத்தும் விதமாக மார்ச் 25 முதல் ஏப்ரல் 14 வரை (21 நாட்கள்) ஊரடங்கு அமல்படுத்தப்பட்டிருந்தது.

மேலும் பேருந்து, ரெயில் மற்றும் விமான உள்பட அனைத்து போக்குவரத்து சேவைகளும் ரத்து செய்யப்பட்டது. இதனால் வேலை, கல்வி உள்ளிட்ட காரணங்களுக்காக வேறு மாநிலங்களுக்கு சென்றவர்கள் தங்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் அவதிப்பட்டு வந்தனர்.

நாடு முழுவதும் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு நேற்று முடிவுக்கு வருவதாக இருந்தது. ஆனால், நேற்று நாட்டு மக்களுக்கு உரையாற்றிய பிரதமர் மோடி ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவித்தார். இதனால் வெளிமாநிலங்களில் சிக்கித்தவிக்கும் மக்கள் சொந்த ஊர்களுக்கு திரும்புவதில் சிக்கல் நிலவி வருகிறது.

இந்நிலையில், கர்நாடக மாநிலம் உடுப்பியை சேர்ந்தவர் கிருஷ்ணா (35). இவர் மகாராஷ்டிரா மாநிலம் சப்-அர்பன் கன்டிவாலி பகுதியில் உள்ள ஒரு கோவிலில் பூசாரியாக வேலை செய்துவந்தார்.

இவர் மார்ச் மாதம் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு காரணமாக தனது சொந்த ஊருக்கு செல்லமுடியாமல் மிகவும் மன உளைச்சலால் இருந்தார். ஆனால், ஏப்ரல் 14-ம் தேதி (நேற்று) ஊரடங்கு முடிவுக்கு வந்த உடன் தனது ஊருக்கு சென்று விடலாம் என எண்ணி காத்திருந்தார்.

ஆனால், ஊரடங்கு மே 3-ம் தேதி வரை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டதையடுத்து மீண்டும் மிகுந்த மன உளைச்சலுக்கு உள்ளான கிருஷ்ணா தான் தங்கி இருந்த வீட்டில் உள்ள சமையல் அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதையடுத்து கிருஷ்ணாவின் உடலை கைப்பற்றிய போலீசார் இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!