வரலாறு காணாத உச்சத்தை தொட்டது தங்கத்தின் விலை


தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு இருக்கிறது. ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

தங்கம் விலை கடந்த ஆண்டின் தொடக்கத்தில் ஒரு பவுன் ரூ.24 ஆயிரம் என்ற நிலையில் இருந்தது. அதன் பிறகு கொஞ்சம், கொஞ்சமாக விலை உயரத் தொடங்கியது. தொடர்ச்சியாக விலை விறுவிறுவென உயர்ந்து, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் 7-ந்தேதி ஒரு பவுன் ரூ.28 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்பட்டது.

அவ்வப்போது விலை சற்று குறைந்தாலும், அதற்கு மறுநாளே ராக்கெட் வேகத்தில் விலை அதிகரித்து காணப்படும். அந்த வகையில் கடந்த ஆண்டின் டிசம்பர் மாதம் 31-ந்தேதி ஒரு பவுன் ரூ.30 ஆயிரத்தை நெருங்கியது. அடுத்த ஓரிரு நாட்களிலேயே (இந்த ஆண்டு ஜனவரி 3-ந்தேதி) ரூ.30 ஆயிரத்தையும் தாண்டியது. அதன்பின்னர், ஒவ்வொரு நாளும் புதிய உச்சத்தை தொட்ட வண்ணமே தங்கம் விலை இருந்து வருகிறது.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக கடந்த மாதம் 14-ந்தேதிக்கு பிறகு நகைக்கடைகள் தமிழகத்தில் மூடப்பட்டன. அதன் பிறகு தங்கத்தை பற்றி மக்கள் எந்த கவலையும் கொள்ளவில்லை. ஊரடங்கால் மக்கள் முடங்கி போய் இருந்தாலும், தங்கத்தின் விலையில் மட்டும் மாற்றம் இருந்து கொண்டே வந்தது.

இந்தநிலையில், தற்போது தங்கம் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டு, அனைவரும் புருவத்தை உயர்த்தி பார்க்கும் அளவுக்கு உயர்ந்துள்ளது. ஊரடங்குக்கு முன்பு ஒரு கிராம் தங்கம் ரூ.3 ஆயிரத்து 952-க்கும், ஒரு பவுன் ரூ.31 ஆயிரத்து 616-க்கும் விற்பனை ஆனது. பின்னர், ஒவ்வொரு நாளும் விலை அதிகரித்து கொண்டே வந்து, நேற்று ஒரு கிராம் ரூ.4 ஆயிரத்து 502-க்கும், ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 16 என்ற நிலையிலும் தங்கம் உச்சத்தில் இருப்பதாக வியாபாரிகள் கூறுகின்றனர்.


அதாவது ஊரடங்கு இருக்கும் இந்த இடைபட்ட காலத்தில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.550-ம், பவுனுக்கு ரூ.4 ஆயிரத்து 400-ம் உயர்ந்து இருக்கிறது குறிப்பிடத்தக்கது. ஊரடங்கு முடிந்து, இயல்பு நிலைக்கு திரும்பும்போது, ஒரு பவுன் தங்கம் ரூ.40 ஆயிரத்தை தொட்டால் கூட ஆச்சரியப்படுவதற்கு இல்லை என்பது வியாபாரிகள் கணிப்பாக இருக்கிறது.

கடந்த ஆண்டு இதே தமிழ் புத்தாண்டு(நேற்று) தினத்தன்று ஒரு பவுன் தங்கம் ரூ.24 ஆயிரத்து 268-க்கு விற்பனை ஆனது. ஓராண்டு இடைவெளியில் பவுனுக்கு ரூ.11 ஆயிரத்து 748 அதிகரித்து, ஒரு பவுன் ரூ.36 ஆயிரத்து 16 என்ற நிலைக்கு நேற்று வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தங்கத்தை மக்கள் வாங்கவில்லை என்றாலும், அதன் விலை மட்டும் இந்த அளவுக்கு ஏன் உயர்ந்து இருக்கிறது? என்பது குறித்து மெட்ராஸ் வைரம் மற்றும் தங்க வியாபாரிகள் சங்க தலைவர் ஜெயந்திலால் ஷலானி கூறியதாவது:-

தங்கம் விற்பனையாகாவிட்டாலும், அதன் மீது முதலீட்டாளர்கள் எப்போதும் முதலீடு செய்து கொண்டு தான் இருப்பார்கள். தற்போது பங்கு சந்தையில் பெரும் முதலீட்டாளர்கள் முதலீடு செய்வதை தவிர்த்துவிட்டு, தங்கத்தின் மீது தான் முதலீடு செய்ய அதிகம் பேர் ஆர்வம் காட்டுகிறார்கள். இதனால் தான் அதன் விலை உயருகிறது. இனி வரக்கூடிய நாட்களிலும் இதே நிலைதான் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!