சவுதி அரச குடும்பத்தையும் தாக்கிய கொரோனா வைரஸ்.. தி நியூயார்க் டைம்ஸ் பகீர்..!


சவுதி அரச குடும்பத்தைச் சேர்ந்த சுமார் 150 பேர், சமீபத்திய வாரங்களில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்று ஒரு செய்தி தி நியூயார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியாகியுள்ளது.

ரியாத் மாகாண கவர்னராக உள்ள 70 வயதாகும், சவூதி இளவரசர் பைசல் பின் பந்தர் கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளார் என்று தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

84 வயதாகும் அரசர் சல்மான், பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் (எம்.பி.எஸ்) போன்றோர் தங்களைத் தாங்களே தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

அரச குடும்பத்தினருக்கு சிகிச்சையளிக்கும் ஒரு மல்ட்டி ஸ்பெஷாலிட்டி மருத்துவமனையை சேர்ந்த மருத்துவர்கள், 500 படுக்கைகளை தயார் நிலையில் வைத்திருக்கிறார்களாம்.
“எங்களிடம் எத்தனை நோயாளிகள் வருவார்கள் என்பது எங்களுக்குத் தெரியாது, ஆனால் அதிக எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்து உள்ளோம்” என்று அந்த மருத்துவமனை நிர்வாகம் கூறியுள்ளது.

ஆயிரக்கணக்கான சவுதி இளவரசர்கள் உள்ளனர். பலர் தொடர்ந்து ஐரோப்பாவிற்கு பயணம் செய்கிறார்கள், அதில் சிலர் வெளிநாட்டில் வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி அதை சவூதி அரேபியாவிற்கு கொண்டு வந்ததாக நம்பப்படுகிறது.

சுமார் 33 மில்லியன் மக்கள் சவுதியில் உள்ளனர். அங்கு இதுவரை 2,932 நோயாளிகள் கண்டறியப்பட்டுள்ள நிலையில், 41 பேர் அந்த நோய்க்கு இறந்துள்ளனர்.

இஸ்லாம் மதத்தின் புனித தலங்களான மெக்கா மற்றும் மதீனாவின் தாயகம் இந்த நாடு. ஆனால் இந்த, ஆண்டு முழுவதும் உம்ரா யாத்திரைக்கு தடை விதித்து, மார்ச் மாத தொடக்கத்தில் அந்த பகுதிகளை வழிபாட்டுக்கு திறந்துவிடாமல் மூடியது சவுதி அரசு.

ஐந்து முக்கிய நகரங்கள் 24 மணி நேர லாக்டவுனுக்கு கீழ் கொண்டுவரப்பட்டுள்ளன.-source: oneindia

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!