4 மாதங்களில்… உலகத்தில் இத்தனை லட்சம் பேருக்கு கொரோனா வைரஸ் பரவியதா..?


4 மாதங்களில் கொரோனா வைரஸ், உலகமெங்கும் 15 லட்சம் பேருக்கு பரவி உள்ளது. இதற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 90 ஆயிரத்தை கடந்தது.

சீனாவின் உகான் நகரில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 1-ந் தேதி, கொரோனா வைரஸ் முதன்முதலாக உருவானது கண்டு அறியப்பட்டது.

அதைத் தொடர்ந்து இந்த 4 மாதங்களில் இந்தியா, அமெரிக்கா, ரஷியா, பிரான்ஸ், இங்கிலாந்து என்று கிட்டத்தட்ட 200 நாடுகளில் இந்த வைரஸ் பரவிவிட்டது.

இதன் ஆதிக்கத்தை கட்டுப்படுத்த இன்னும் ஒரு வழி கண்டறியப்படவில்லை. அந்த வகையில் இந்த வைரஸ், அறிவியல் உலகுக்கு மாபெரும் சவாலாக அமைந்துள்ளது.

4 மாதங்களில் உலகின் பல நாடுகளிலும் இந்த வைரஸ் ருத்ர தாண்டவமாடி விட்டது. குறிப்பாக இத்தாலி, ஸ்பெயின், அமெரிக்கா ஆகிய நாடுகள் மிகுந்த பாதிப்புக்கு ஆளாகி உள்ளன.

இந்தியாவையும் விடாமல் துரத்தி வருகிறது.

இந்தநிலையில் உலகமெங்கும் இந்த வைரஸ் பாதிப்புக்கு ஆளானோரின் எண்ணிக்கை 15 லட்சத்தையும் கடந்துள்ளது.

அதேபோல் பலியானவர்கள் எண்ணிக்கை 90 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது.

பல்வேறு நாடுகளின் அதிகாரப்பூர்வ தகவல்கள் மற்றும் உலக சுகாதார நிறுவனம் ஆகியவற்றின் தகவல்கள் அடிப்படையில் இந்த புள்ளி விவரத்தை ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது.

அதே நேரத்தில் பல நாடுகள் மிகவும் மோசமான நிலையில் இருப்பவர்களுக்கே கொரோனா பரிசோதனை செய்வதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

உலக நாடுகளில் கொரோனா வைரஸ் பாதித்தவர்களின் எண்ணிக்கையில் அமெரிக்க நாடு முதல் இடத்தில் உள்ளது. இங்கு சுமார் 4 லட்சத்து 40 ஆயிரம் பேருக்கு இந்த வைரஸ் பாதித்து இருப்பதாகவும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும் ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் கூறுகிறது.

இரண்டாவது இடத்தில் ஸ்பெயின் இருக்கிறது. இந்த நாட்டில் 1 லட்சத்து 50 ஆயிரத்துக்கும் அதிகமானோரை இந்த வைரஸ் தாக்கி இருப்பதாகவும், 15 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பலியாகி இருப்பதாகவும் இந்த தகவல்கள் கூறுகின்றன.

மூன்றாவது இடத்தில் இத்தாலி இருக்கிறது.

இந்த நாட்டில், கொரோனா வைரஸ் நோய் தாக்கியவர்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 50 ஆயிரத்தை நெருங்கி இருப்பதாகவும், உயிரிழந்த வர்களின் எண்ணிக்கை 17 ஆயிரத்தை கடந்துள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

கண்டம் என்று பார்த்தால், ஐரோப்பாதான் இந்த வைரசின் தீவிர தாக்குதலுக்கு ஆளாகி உள்ளது. இங்கு மொத்தம் 7 லட்சத்து 72 ஆயிரத்து 592 பேருக்கு பாதிப்பு இருப்பதாகவும், 61 ஆயிரத்து 118 பேர் பலியாகி இருப்பதாகவும் ஏ.எப்.பி. செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!