சேமித்து வைத்த 10 லட்சம் ரூபாயையும் நிவாரண நிதிக்கு வழங்கிய அந்த பெண் யார்..?


உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு பெண், வங்கியில் சேமித்து வைத்திருந்த 10 லட்சம் ரூபாய் பணத்தையும் பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கியிருக்கிறார்.

இந்தியாவில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த மத்திய, மாநில அரசுகள் தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளன. மேலும், கொரோனாவுக்கு எதிரான போராட்டம் மற்றும் நிவாரணப் பணிகளுக்காக பொதுமக்கள் தங்கள் பங்களிப்பை வழங்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்திருந்தார். இதற்காக PM Cares Fund என்ற பெயரில் தனி நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது. இதேபோல் மாநில அரசுகளும் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நன்கொடை வழங்கும்படி வேண்டுகோள் விடுத்தன.

இந்த வேண்டுகோளை ஏற்று பல்வேறு பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், பொதுமக்கள் என அனைத்து தரப்பினரும் தங்களால் முடிந்த நன்கொடைகளை வழங்கி வருகின்றனர்.

சாதாரண மக்களும் தங்களால் முடிந்த நன்கொடைகளை வழங்குகின்றனர். சிலர் தங்களின் எதிர்காலத்திற்காக சேமித்து வைத்திருந்த பணம் அல்லது முக்கிய தேவைக்காக வைத்திருந்த பணம், கோவிலுக்கு செல்வதற்காக வைத்திருந்த பணத்தை நிவாரண நிதிக்கு வழங்கி, கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தங்கள் பங்களிப்பை செலுத்தி வருகின்றனர்.

அவ்வகையில் உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தேவகி பண்டாரி (வயது 60) என்ற பெண், தனது வங்கிக் கணக்கில் சேமித்து வைத்திருந்த 10 லட்சம் ரூபாய் பணத்தையும் பிரதமரின் நிவாரண நிதிக்கு வழங்கி, மக்களுக்கு தேவையான உதவிகளை செய்யும்படி கூறியுள்ளர்.

தேவகி பண்டாரி செய்த நன்கொடையானது கொடை வள்ளல்களான கர்ணன் மற்றும் மகாபலி சக்கரவர்த்தியை தனக்கு நினைவுபடுத்தியதாக உத்தரகாண்ட் முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் கூறியுள்ளார்.

தேவகி பண்டாரி சாமோலி மாவட்டம் கவுசார் பகுதியில் வசித்து வருகிறார். அவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். குழந்தைகள் இல்லாத நிலையில், தனியாக வாழ்ந்து வரும் தேவகி, ஒட்டுமொத்த இந்தியாவை தனது குடும்பமாக நினைத்து இந்த உதவியை செய்து, நமக்கு உத்வேகம் அளித்திருப்பதாக முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் பாராட்டு தெரிவித்துள்ளார்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!