பணத்தை வீதிகளில் தூக்கி வீசிய இத்தாலி மக்கள்..? வைரல் பதிவின் உண்மை என்ன..?


இனி கையில் பணம் இருந்தும் பயனில்லை என கருதி மக்கள் பணத்தை தூக்கி வீசியதாக புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி உள்ளது.

இத்தாலியில் கொரோனா பாதிப்பு காரணமாக உயிரிழப்புகள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பொது மக்கள் பணத்தை வீதிகளில் தூக்கி வீசும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இதுகுறித்து வைரலாகும் பதிவுகளில் “இத்தாலியர்கள் தங்களது பணத்தை வீதிகளில் தூக்கி வீசுகின்றனர். அவர்களுக்கு இப்போது அது தேவையற்றதாகி இருக்கிறது..”

வைரல் புகைப்படங்களை ஆய்வு செய்ததில், அவை ஒரு வருடத்திற்கு முன் வெனிசுலாவில் எடுக்கப்பட்டது என தெரியவந்துள்ளது. ரிவர்ஸ் சர்ச் செய்ததில், இந்த புகைப்படங்கள் மார்ச் 2019 முதல் வலம் வருவது கண்டறியப்பட்டுள்ளது.

இதுகுறித்து வெளியாகி இருக்கும் தகவல்களில் வெனிசுலாவின் பழைய பணத்தை மக்கள் வீதிகளில் வீசியிருக்கின்றனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. வெனிசுலாவில் ஆகஸ்ட் 2018 இல் பழைய ரூபாய் நோட்டுக்கள் செல்லாது என அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மக்கள் பழைய நோட்டுக்களை வீதிகளில் வீசினர்.

மேலும் வெனிசுலா மக்கள் வங்கி ஒன்றை கொள்ளையடித்து அதில் இருந்து எடுத்த பணத்தை எரித்துவிட்டு, சிலவற்றை வீதிகளில் வீசியதாகவும் கூறப்படுகிறது. இதே தகவலினை பலர் தங்களது ட்விட்டர் அக்கவுண்ட்டில் புகைப்படங்களுடன் பதிவிட்டு இருக்கின்றனர்.

அந்த வகையில் இத்தாலியில் எடுக்கப்பட்டதாக வைரலாகும் புகைப்படங்கள் மற்றும் அதற்கு கூறப்பட்ட காரணம் முற்றிலும் பொய் என தெளிவாகிவிட்டது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயங்களில் போலி செய்தி பாதிப்பு காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கின்றன.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!