கொரோனா வைரஸ் பீதியிலும் தெரு நாய்களுக்கு கருணை காட்டும் சகோதரிகள்


ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால், உணவு கிடைக்காமல் தவித்த தெரு நாய்களுக்கு நாக்பூர் சகோதரிகள் உணவு வழங்கியது அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

சமூக இடைவெளி மற்றும் தனிமைப்படுத்தலை பின்பற்றுவதன்மூலம் கொரோனா வைரஸ் பரவுவதை பெருமளவிற்கு கட்டுப்படுத்த முடியும். எனவே, நாடு முழுவதும் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது. தேவையற்ற காரணங்களுக்காக வீடுகளை விட்டு வெளியில் செல்லக்கூடாது என்று உத்தரவிடப்பட்டுள்ளது.

ஊரடங்கு உத்தரவால் ஒருசிலர் தவிர பெரும்பாலான மக்கள் வீடுகளுக்குள் முடங்கி உள்ளனர். சாலைகள் வெறிச்சோடி காணப்படுகின்றன.

இந்நிலையில் ஊரடங்கு உத்தரவால் உணவின்றி தவிக்கும் தெரு நாய்களுக்கு உணவு வழங்கி கருணை காட்டுகின்றனர் மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த காஜல், திஷா ஆகிய சகோதரிகள். நாக்பூரைச் சேர்ந்த இவர்கள் இருவரும், தங்கள் வீட்டில் சமைத்த உணவுகள் மற்றும் பிஸ்கட் போன்றவற்றை தெருவில் சுற்றித் திரியும் நாய்களுக்கு வழங்குகின்றனர்.

‘ஊரடங்கால் அனைத்து உணவங்களும் மூடப்பட்டுள்ளன. ஒரு சில மக்கள் மட்டுமே வீட்டை விட்டு வெளியே வருகின்றனர். இதனால் தெரு நாய்களுக்கு உணவு கிடைக்காத சூழ்நிலை உள்ளது. எனவே, எங்களால் முடிந்த அளவிற்கு இந்த நாய்களுக்கு உணவு வழங்குகிறோம்’ என சகோதரிகளில் ஒருவர் தெரிவித்தார்.

கொரோனா வைரசின் தாக்கத்தில் இருந்து தப்பிக்க, முக கவசம் அணிந்தே வெளியே வருகின்றனர். ஊரடங்கு உத்தரவு, கொரோனா வைரஸ் அச்சத்திற்கு மத்தியிலும், தெரு நாய்களுக்கு உணவு வழங்கிய சகோதரிகளின் மனிதாபிமான செயலை பலரும் பாராட்டி வருகின்றனர்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!