கொரோனா பரவுகிறது.. நீ தள்ளி நில் என கூறிய கூலித் தொழிலாளிக்கு நடந்த பயங்கரம்..!


ஊட்டி அருகே கொரோனா யாரால் பரவுகிறது என்ற தகராறில் கூலி தொழிலாளியை குத்தி கொன்ற போண்டா மாஸ்டரை போலீசார் கைது செய்தனர்.

நீலகிரி மாவட்டம் ஊட்டி அருகே உள்ள நொண்டிமேடு பகுதியை சேர்ந்தவர் ஜோதிமணி(வயது 35).

இவர் ஊட்டி மார்க்கெட்டில் கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். இவருக்கு சாந்தாமணி என்ற மனைவியும், 2 குழந்தைகளும் உள்ளனர்.

நேற்று வழக்கம்போல் ஜோதிமணி வேலைக்கு சென்றார். மதியம் வேலை முடிந்து டீ குடிப்பதற்காக ஊட்டி மத்திய போலீஸ் நிலையம் அருகே உள்ள டீக்கடைக்கு சென்றார். அங்கு போண்டா மாஸ்டராக கேரள மாநிலம் பாலக்காட்டை சேர்ந்த தேவதாஸ்(43) என்பவர் வேலை பார்த்து வருகிறார்.

அங்கு அவர் வடை போடுவதற்காக வெங்காயம் நறுக்கி கொண்டிருந்தார். அப்போது அங்கு டீ குடிக்க வந்த ஜோதிமணியை அருகில் வராதே, தள்ளி நில் கொரோனா பரவுகிறது என்று கூறியுள்ளார். இதில் கோபம் அடைந்த ஜோதிமணி என்னால் கொரோனா பரவவில்லை.

உனது சொந்த ஊரான கேரளாவில் தான் கொரோனா வேகமாக பரவி வருகிறது. நீ தள்ளி நில் என்றார். இதனால் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது.

வாக்குவாதம் முற்றவே ஆத்திரமடைந்த தேவதாஸ் தான் வெங்காயம் நறுக்க பயன்படுத்திய கத்தியால் ஜோதிமணியின் கழுத்தில் குத்தினார்.

இதில் நிலைகுலைந்து ரத்த வெள்ளத்தில் ஜோதிமணி சரிந்து கீழே விழுந்தார்.

இதை பார்த்து அதிர்ச்சியான அருகில் உள்ளவர்கள் அவரை உடனடியாக மீட்டு ஊட்டி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவல் அறிந்த ஊட்டி நகர துணை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினர்.

இதில் கொரோனா யாரால் பரவுகிறது என்ற தகராறில் தேவதாஸ், ஜோதிமணியை கத்தியால் குத்தியது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் தேவதாசை கைது செய்தனர்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!