போர்களையும், சண்டைகளையும் உடனடியாக நிறுத்துங்கள் – ஐ.நா. பொதுச்செயலாளர்


உலகில் நடைபெறும் அனைத்து போர்களையும் உடனடியாக நிறுத்துங்கள் என ஐ.நா. சபையின் பொதுச்செயலாளர் அன்ட்டோனியோ குட்டரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது உலகின் 195 நாடுகளுக்கு பரவியுள்ளது.

மனித குலத்துக்கே மிகப்பெரும் அச்சுறுத்தலாக விளங்கி வரும் இந்த வைரஸ் இதுவரை 3 லட்சத்து 78 ஆயிரத்து 394 பேருக்கு பரவியுள்ளது. இவர்களில் 16 ஆயிரத்து 491 பேர் உயிரிழந்துள்ளனர்.

மேலும், இந்த வைரஸ் தாக்குதல் காரணமாக 2 லட்சத்து 60 ஆயிரத்து 319 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் இதுவரை 1 லட்சத்து ஆயிரத்து 584 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டுள்ளனர்.

உலகையே அச்சுறுத்திவரும் இந்த வைரசுக்கு தடுப்பு மருந்து கண்டுபிடிக்க பல்வேறு நாடுகள் தீவிர முயற்சி மேற்கொண்டுவருகின்றன.

ஒரு பக்கம் கொரோனா வைரஸ் உலகையே ஆட்டிப்படைத்துவரும் நிலையில் மறுபக்கம் பல்வேறு நாடுகளில் உள்நாட்டுச்சண்டை, பயங்கரவாத தாக்குதல்கள் என இடைவிடாமல் போர்கள் அரங்கேறித்தான் வருகிறது.

இந்நிலையில், உலகில் நடைபெறும் அனைத்து உடனடியாக நிறுத்தும் படி உலக நாடுகளுக்கு ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச்செயலாளர் அண்ட்டோனியோ குட்டரஸ் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

அண்ட்டோனியோ குட்டரஸ்

இது குறித்து இன்று அவர் கூறுகையில், ” உலகின் அனைத்து பகுதிகளிலும் நடைபெற்றுக்கொண்டிருக்கும் போர்களையும், சண்டைகளையும் உடனடியாக நிறுத்தும்படி நான் அழைப்பு விடுக்கிறேன்.

விரோதங்கள், அவநம்பிக்கை, பகைமை ஆகியவற்றில் இருந்து பின்வாங்கி ஆயுத சண்டைகளை முடிவுக்கு கொண்டு வாருங்கள். நாம் அனைவரும் ஒன்றிணைந்து நமது உயிரை காக்க உண்மையான போர் செய்யும் (கொரோனா வைரஸ்) நேரம் வந்து விட்டது’’ என்றார்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!