வீட்டை விட்டு மக்கள் வெளியில் வராமல் இருக்க சிங்கத்தை களமிறக்கிய அதிபர்..?


கொரோனா எதிரொலி காரணமாக மக்கள் வெளியில் வராமல் இருக்க அதிபர் ஒருவர் சிங்கத்தை வீதிகளில் களமிறக்கி இருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பு பரவாமல் தடுக்கும் நோக்கில் மக்கள் வெளியில் வராமல் இருக்க அதிபர் ஒருவர் சிங்கத்தை சாலைகளில் நடமாட செய்திருப்பதாக சமூக வலைதளங்களில் தகவல் வைரலாகி வருகிறது.

எனினும், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் மக்கள் தங்களின் வீடுகளை விட்டு வெளியே வராமல் தடுக்க 800 புலி மற்றும் சிங்கங்களை நாடு முழுக்க வீதிகளில் வலம்வர செய்திருப்பதாக ஃபேஸ்புக்கில் தகவல் வைரலாகி வருகிறது.

வைரல் பதிவுகளில், ‘நாடு முழுக்க மக்கள் வீடுகளை விட்டு வெளியேறாமல் இருக்க விளாடிமிர் புதின் 800 புலி மற்றும் சிங்கங்களை வீதிகளில் களமிறக்கி இருக்கிறார்’ எனும் தலைப்பில் ஃபேஸ்புக்கில் பகிரப்பட்டு வருகிறது. வைரல் பதிவில் சிங்கம் ஒன்று வீதிகளில் நடமாடும் புகைப்படம் இணைக்கப்பட்டு இருக்கிறது.

புகைப்படத்தை இணையத்தில் ஆய்வு செய்த போது, வைரல் புகைப்படம் ஏப்ரல் 15, 2016 இல் தனியார் செய்தி வலைதளம் ஒன்றில் பயன்படுத்தப்பட்டு இருப்பது தெரியவந்துள்ளது. அதன்படி கொலம்பஸ் என்ற பெயர் கொண்ட சிங்கம் படப்பிடிப்பிற்காக தென் ஆப்ரிக்காவின் ஜொகானஸ்பர்க் பகுதிக்கு கொண்டுவரப்பட்டதாக குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இதே தகவலை உறுதிப்படுத்தும் பல்வேறு செய்தி குறிப்புகள் இணையத்தில் கிடைத்திருக்கின்றன. அந்த வகையில் வைரலாகும் புகைப்படம் ரஷ்யாவில் எடுக்கப்படவில்லை என்பதும், விளாடிமிர் புதின் மக்களை வீடுகளினுள் இருக்க செய்வதற்காக அவற்றை வீதிகளில் களமிறக்கவில்லை என்பது உறுதியாகி இருக்கிறது.

போலி செய்திகளை பரப்பாதீர்கள். போலி செய்திகளால் பல்வேறு பாதிப்புகள் ஏற்படுகின்றன. சமயத்தில் போலி செய்தி தாக்கம் காரணமாக உயிரிழப்புகளும் ஏற்பட்டு இருக்கிறது. உலகில் கொரோனா அச்சம் மக்களை வதைத்து கொண்டிருக்கும் நிலையில், உண்மையற்ற தகவல்களால் அவர்களை மேலும் அச்சுறுத்த வேண்டாம்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!