தமிழகத்தில் ரஜினி ஆட்சிக்கு வந்தால் இவர்கள் தான் அதிகமாவார்கள்! – எச்சரிக்கை செய்தி!


ஆன்மீகச் சொற்பொழிவாளர் ஒருவர் பிரசங்கம் செய்து கொண்டிருந்தார். வயதான ஆண்களும், பெண்களும் நிறைய கூடி, அவர் பேச்சை மெய் மறந்து கேட்டுக் கொண்டிருந்தனர். அவர்கள் மனதில் ஆன்மீகத்தின் ஊற்று பொங்கிக் கொண்டிருந்தது.

இடையே, ஒரு கதையையும், அந்தக் கதையில் வரும் ஒரு நடன மங்கையின் அழகைப் பற்றியும் வர்ணித்துக் கூறினார். பிரசங்கத்தைக் கேட்டுக் கொண்டிருந்த வயதான ஆண்களின் மனம், அவர் சொன்ன நடன மங்கையின் அழகிற்கு மாறி விட்டது.

பிரசங்கம் முடிந்த மறுநாள் அந்த வயதானவர்களில் பெரும்பாலானோர், அவளது அங்கங்கள் எப்படியெல்லாம் இருந்திருக்கும். அவள் ஆடும் போது அவளது அங்கங்கள் எப்படியெல்லாம் அசையும் என்றெல்லாம் தங்களுக்குள் ஆசையுடன் பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது, அந்தப் பிரசங்கம் செய்பவர் அவர்களைக் கடந்து போய்க் கொண்டிருந்தார். அவர்கள் அவரை அழைத்து, அந்த நடன மங்கையைப் பற்றி, இன்னும் விபரமாச் சொல்லச் சொன்னார்கள். அதைக் கேட்டு அவர் மனம் வருந்திச் சொன்னார், “நான் அவளைப் பற்றி எனது பிரசங்கத்தில் ஒரு வரி தான் பேசினேன். பிறகு நான், உங்களுக்கு இறைவனைப் பற்றித் தானே முழுக்க பேசினேன்.


ஆனால், நீங்கள் நான் இறைவனைப் பற்றிச் சொன்னதை எல்லாம் விட்டு விட்டு, ஒரு வரியில் சொன்ன அந்த பெண்ணைப் பற்றி ஒரு நாள் முழுக்க பேசுகிறீர்கள். நல்லதை விட தீயவை தான் தீ போல் பரவும் என்பதனை உங்கள் பேச்சின் மூலம் அறிந்து கொண்டேன். இனி நான், நல்லதை மட்டுமே பிரசங்கத்தில் சொல்வேன்” என்று கூறி விட்டுச் சென்றார்.

ரஜினியின் கதையும் இது தான். மூன்று முடிச்சு படத்தில் வில்லனாக நடித்துக் கொண்டிருந்தார் ரஜினி. ஒரு நாள் படப்பிடிப்பின் இடைவேளையில் ஒரு மரத்தடியில், தன் கையில் வைத்திருந்த சிகரெட்டை ஸ்டைலாக வாயில் போடுவதை, தள்ளியிருந்து பார்த்த பாலசந்தர், ரஜினியை அழைத்து, சிகரெட்டை மறுபடியும் அப்படிப் போடச் சொன்னார். ரஜினி அந்த சிகரெட்டை வைத்து மேலும் சில வித்தைகள் செய்தார். அது பாலசந்தருக்குப் பிடித்துப் போய் விட்டது.

அந்த மேனரிசம் மூன்று முடிச்சு படத்தில் வரும் வில்லன் பாத்திரத்திற்கு நன்றாக இருக்கும் என்று நினைத்து, ரஜினியின் சிகரெட் ஸ்டைலை எல்லாம், அநதப் படத்தில் காட்டினார். மேலே சொன்ன பக்தர்களைப் போலத் தான் ரசிகர்களும். நல்ல விஷயத்தை எல்லாம் விட்டு விட்டு அவர்கள், ரஜினியின் அந்த சிகரெட் ஸ்டைலை மிகவும் ரசித்தார்கள்.

சிகரெட் பிடிக்கத் தெரியாதவர்கள், அதற்கான வயதிற்கு வராத விடலைப் பசங்கள் கூட, இதற்காகவே, சிகரெட் பிடிப்பதற்குப் பழகினார்கள். இன்று வரை அந்தப் பழக்கத்தை விட முடியாமல், தவிக்கிறார்கள். இன்று வரை ரஜினியின் பிரதான அடையாளமாகவும், ஸ்டைலாகவும் இருப்பது அவரது சிகரெட் ஸ்டைல் தான்.


அவர் பாபா படத்தில், கையில் சாராய பாட்டில், வாயில் புகையும் சிகரெட்டுடன், பாபா முத்திரையைக் காட்டுவார். அதைத் தான் போஸ்டரிலேயே போட்டிருந்தார்கள். குடிப்பதையும், புகைப்பதையும் ரஜினி ஆன்மீகத்தின் ஒரு அங்கமாக எடுத்துக் கொண்டாரா என்பதற்கு, அவர் சொல்வது போல, அந்த ஆண்டவன் தான் பதில் சொல்ல வேண்டும்.

இன்று குடியால் ஆயிரக் கணக்கான குடும்பங்கள் நடுத்தெருவில் நின்று தவிக்கின்றன. ரஜினியைப் பார்த்து சிகரெட் பிடித்தவர்கள், ஒரு படி மேலே போய், அதில் கஞ்சாவைப் போட்டு புகைத்துக் கொண்டு, போதை மகன்களாக புத்தியை இழந்து, திரிந்து கொண்டிருக்கிறார்கள்.

இப்போது ரஜினி, ஆன்மிக அரசியல் நடத்தப் போவதாகச் சொல்கிறார். எந்த ஆன்மீகத்தில், இப்படிக் குடியும், புகையும் அங்கமாக இருக்கிறது என்ற கேள்விக்கு, நிச்சயம் அவர் பதில் சொல்லித் தான் தீர வேண்டும். ரஜினி ஆட்சிக்கு வந்தால், நிச்சயம் மதுவையும், புகையையும் ஒழிக்க மாட்டார்.

மாறாக, இன்று அதிகரித்துக் கொண்டிருக்கும் போலிச் சாமியார்களின் எண்ணிக்கையும், அவர்களது லீலைகளும், அத்து மீறிப் போகும். அதையெல்லாம் ரஜினி, “கடவுள் பார்த்துக் கொள்வார்” என்று சொன்னால், அது எந்தக் கடவுள் என்று நாமும் அவரிடம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும்.-Source: seithipunal

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!