பாலிடெக்னிக் மாணவர் கழுத்தை அறுத்து கொலை… கதறியழுத பெற்றோர்..!


கடலூர் முதுநகரில் பாலிடெக்னிக் மாணவர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடலூர் முதுநகர் சிவானந்தபுரம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ்பெஞ்சமின். இவரது மனைவி பிரதீபா. இவர்களது மகன் ஜெய்வின்ஜோசப் (வயது 18).

இவர் கடலூரில் உள்ள ஒரு பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வந்தார். கடந்த 4-ந்தேதி ஜெய்வின்ஜோசப் வீட்டில் இருந்து வெளியே சென்றார்.

அதன்பின்பு வீடு திரும்பவில்லை. இதனால் கவலையடைந்த பெற்றோர் பல இடங்களில் ஜெய்வின் ஜோசப்பை தேடினர். எங்கும் அவரை காணவில்லை.

இதுகுறித்து அவரது தாய் பிரதீபா கடலூர் முதுநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குபதிவு செய்து மாயமான மாணவரை தேடி வந்தனர்.

மாவட்ட போலீஸ்சூப்பிரண்டு ஸ்ரீஅபிநவ் உத்தரவின் பேரில் மாயமான மாணவனை கண்டுபிடிக்க முதுநகர் இன்ஸ்பெக்டர் பால்சுதர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படை போலீசார் மாணவர் ஜெய்வின்ஜோசப் பயன்படுத்திய செல்போன் எண்ணை கொண்டு ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 2 பேர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. போலீசார் அவர்கள் 2 பேரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டனர்.

விசாரணையில் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினார்கள். போலீசார் தங்கள் பாணியில் விசாரணை மேற்கொண்டபோது, மாணவன் ஜெய்வின் ஜோசப்பை கொலை செய்து புதைத்துவிட்டதாக திடுக்கிடும் தகவலை தெரிவித்தனர்.

அதனைத்தொடர்ந்து போலீசார் அவர்களிடம் விசாரணை மேற்கொண்டபோது பல தகவல்கள் கிடைத்தனர். அந்த வாலிபர்கள் 2 பேரும் மாணவர் ஜெய்வின் ஜோசப்பை காரைக்காடு அருகே அழைத்து சென்றனர். அங்கு வைத்து மாணவருக்கு அவர்கள் மது கொடுத்தனர்.

மதுகுடித்ததும் மாணவர் ஜெய்வின்ஜோசப்புக்கு போதை ஏற்பட்டது. அப்போது அவர்கள் 2 பேரும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் ஜெய்வின்ஜோசப் கழுத்தை அறுத்தனர். ரத்த வெள்ளத்தில் சிறிது நேரத்தில் ஜெய்வின்ஜோசப் துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

அதன்பின்பு அவர்கள் இறந்துபோன ஜெய்வின் ஜோசப் உடலை உப்பனாற்றில் குழிதோண்டி புதைத்தனர். மேற்கண்ட தகவல்கள் விசாரணையில் தெரியவந்தது.

மாணவர் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுது துடித்தனர். இதற்கிடையே மாணவர் கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட தகவல் அறிந்ததும் அவரது உடலை தோண்டி எடுக்க போலீசார் முடிவு செய்தனர்.

இன்று காலை கடலூர் வருவாய் தாசில்தா ர் செல்வகுமார், தடயஅறிவியல் நிபுணர் சாரா மற்றும் மருத்துவகுழுவினர், போலீசார் உப்பநாற்றுக்கு விரைந்து சென்றனர். ஏராளமான பொது மக்களும் அந்த பகுதிக்கு திரண்டு வந்தனர். கழுத்தை அறுத்து கொன்று புதைக்கப்பட்ட மாணவரின் உடலை தோண்டி எடுக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

மாணவர் எதற்காக கொலை செய்யப்பட்டார் என்பது குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!