மஸ்காராவை இப்படி பயன்படுத்தினால் நீங்களும் மயக்கும் அழகியாகலாம்..!


உங்கள் கண்களை ஒரே நிமிடத்தில் பெரியதாகவும், அழகாகவும் மாற்றும் ஒரு அழகு சாதனம் மஸ்காரா. ஒன்று அல்லது இரண்டு முறை கண் இமைகளில் இதைத் தடவினால் போதும் அதிகமாக மேக் அப் போட்டதை போல் காட்டாமல், இயற்கையாகவே அழகான லுக்கை நமது கண்களுக்கு தரும். இந்த மஸ்காரவை பயன்படுத்துவதற்கு என சில உத்திகள் உள்ளன. இதை உலகின் தலை சிறந்த அழகியல் வல்லுநர்களும், அழகு சாதன பொருட்களைத் தயாரிக்கும் நிறுவனங்களுமே தெரிவித்துள்ளன. இந்த நுட்பங்களை அறிந்து கொள்வதன் மூலம் மஸ்காரா பயன்படுத்துவதில் நீங்களும் வல்லுநர்களாகவே மாறி விடுவீர்கள்.

எகிப்திய பெண்கள் கி.மு.3000-ம் நூற்றாண்டிலேயே சூரிய ஒளியில் இருந்து தங்களது கண் இமைகளைப் பாதுகாக்க கண் மையை தங்களது இமைகளிலும் தடவி இந்த மஸ்காரா கலாச்சாரத்தை துவங்கி வைத்துள்ளனர்.


மஸ்காராவை கலைக்காமல் தூங்கலாமா?

நமது கண்களில் அதிக நேரம் மஸ்காரா இருப்பது இமைகளைப் பலவீனமடைய செய்யும். மஸ்காரா போடுவதால் இமைகள் விறைப்பாகவும், கடினமாகவும் மாறும் அதனால் தூக்கத்தில் நீங்கள் திரும்பி படுக்கும் போது இமைகள் எதிலாவது இடித்தால் அது உடைந்துவிடும் அபாயம் உள்ளது. அதுமட்டுமின்றி பொதுவாகவே மேக் அப்பை கலைக்காமல் அப்படியே உறங்குவது சரும ஆரோக்கியத்திற்கும் நல்லதல்ல. ஆகையால் எவ்வளவு சோர்ந்து போய் இருந்தாலும் முகத்தைச் சுத்தமான தண்ணீரில் கழுவி இரப்பதத்தை தக்க வைக்க மாய்ஸ்ட்ரைஸர்(Moisturizer) போன்றவற்றைத் தடவி மசாஜ் செய்துவிட்டு உறங்கச் செல்லுங்கள்.

மஸ்காரா காலாவதியானதை எப்படிக் கண்டுபிடிப்பது?

உங்களது மஸ்காராவில் வினிகர் நாற்றம் வீசுகிறது என்றால் அதை நீங்கள் தூக்கி போட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று அர்த்தம். நாம் உபயோகிக்கும் அழகு சாதன பொருட்களிலேயே காலாவதியாவதற்கு மிகவும் குறைவான காலக் கெடு உள்ளது மஸ்காரா தான். 3 மாதம் மட்டுமே இதை உபயோகிக்கலாம். ஆகையால் இனி மஸ்காராவை உபயோகிப்பதற்கு முன்பு அதை முகர்ந்து பார்த்து உறுதி செய்து கொள்ளுங்கள்.

மஸ்காராவை எப்படித் திறக்க வேண்டும்?

பிரஷில் மஸ்காராவை எடுக்கப் பம்பை போல் மேலும் கீழுமாக அதை அடிப்பது மிகவும் தவறு, நீங்கள் அப்படிச் செய்வதன் மூலம் காற்று சுழற்சி ஏற்பட்டு மஸ்காரா விரைவில் காய்ந்து போகும். உங்களுக்குத் தேவையான மஸ்காராவை பிரஷில் ஒட்டச் செய்ய மூடியைத் திறப்பதற்கு முன்பு முதலில் அதை நன்கு குலுக்க வேண்டும் பின்பு மூடியைத் திறந்து மேலும், கீழும் ஆட்டுவதற்குப் பதில் முன்னும், பின்னுமாகத் திருகி எடுக்க வேண்டும்.


மஸ்காராவை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமா?

பொதுவாகவே அழகு சாதன பொருட்களை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளக் கூடாது, அப்படிப் பகிர்ந்து உபயோகிப்பது தொற்று நோய் பிரச்னைகளை உண்டாக்கும். அதிலும் குறிப்பாக மிகவும் உணர்ச்சிமிக்க பகுதியான கண் சம்பந்தப்பட்ட அழகு சாதனங்களை பகிர்ந்து கொள்வது கண் எரிச்சல் போன்றவற்றை ஏற்படுத்தும்.

மஸ்காராவை எப்படிப் பயன்படுத்த வேண்டும்?

உங்கள் கண் இமைகளை அடர்த்தியாகக் காட்ட ஒரே சமயத்தில் பல தடவை மஸ்காராவை தடவுவது தவறு, அதற்குப் பதிலாக ஒரே ஒரு முறை மட்டும் மஸ்காராவை தடவி பின்னர் சிறிது நேரம் கழித்து அது காய்ந்த பின்னர் மற்றொரு கோட்டிங் தரவது நீங்கள் எதிர்பார்த்த அழகை உங்கள் கண்களுக்கு தரும்.

அடுத்த முறை மஸ்காரா பயன்படுத்தும் போதும், வாங்கும் போதும் இந்த உத்திகளைப் பயன்படுத்துங்கள்.-Source: dinamani

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!