மாணவிகளிடம் தின்பண்டங்களை பிடுங்கி தின்று விளையாடிய கல்லூரி மாணவருக்கு நடந்த பரிதாபம்..!


மாணவிகளிடம் விளையாடியதை கண்டித்ததால் வி‌‌ஷம் தின்ற கல்லூரி மாணவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இது தொடர்பாக துறை தலைவர்-பேராசிரியை மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

தஞ்சை விளார்ரோடு அண்ணா நகர் 9-வது தெருவை சேர்ந்தவர் முகமது ஹனீபா. இவருடைய மகன் மீரா மைதீன்(வயது 21). இவர் தஞ்சையில் உள்ள அன்னை வேளாங்கண்ணி கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பி.காம். மூன்றாம் ஆண்டு படித்து வந்தார்.

கடந்த 2-ந் தேதி இவர் வகுப்பறையில் மாணவிகளிடம் தின்பண்டங்களை பிடுங்கி தின்று விளையாடி கொண்டிருந்தார். இதை பார்த்த பேராசிரியை, மீராமைதீனை கண்டித்து அனுப்பினார்.

விஷம் தின்றார்

கடந்த 5-ந் தேதி பயிற்சி வகுப்பு நடந்தபோது மீரா மைதீனை தனியாக அமர வைத்துவிட்டு, பிற மாணவர்களுக்கு பேராசிரியை பாடம் எடுத்ததாக தெரிகிறது. என்னை ஏன் தனியாக அமர வைத்து இருக்கிறீர்கள் என பேராசிரியையிடம் மீரா மைதீன் கேட்டபோது, அவரை திட்டியதுடன் துறை தலைவரிடமும் அழைத்து சென்றார். அவரும் மீரா மைதீனை தகாத வார்த்தைகளால் திட்டியதாக கூறப்படுகிறது.

இதனால் மனவேதனை அடைந்த அவர், இடைவேளை நேரத்தில் கல்லூரியில் இருந்து நாட்டு மருந்து கடைக்கு சென்று வி‌‌ஷம்(எலி பசை) வாங்கி வந்து கல்லூரி மைதானத்தில் அமர்ந்து தின்று விட்டார்.

பரிதாப சாவு

பின்னர் அவர் வீட்டிற்கு சென்றார். வி‌‌ஷம் தின்ற வி‌‌ஷயத்தை யாரிடமும் சொல்லவில்லை. மறுநாள் அதிகாலை மீரா மைதீன் வாந்தி எடுத்ததை பார்த்த பெற்றோர், என்ன வி‌‌ஷயம் என்று விசாரித்துள்ளனர். அப்போது தான் வி‌‌ஷம் தின்ற தகவலை தெரிவித்துள்ளார். இதையடுத்து அவரை தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

அங்கு குணப்படுத்த முடியாததால் மீண்டும் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக இறந்தார்.

இந்த தகவலை அறிந்த உறவினர்கள் மற்றும் கல்லூரி மாணவர்கள் மருத்துவமனை வளாகத்தில் திரண்டனர். பின்னர் பேராசிரியை, துறை தலைவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இறந்த மாணவரின் குடும்பத்துக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

வழக்குப்பதிவு

இந்த நிலையில் மீரா மைதீன் உடலை பிரேத பரிசோதனை செய்ய ஆம்புலன்ஸ் வாகனத்தில் ஏற்றியபோது, வாகனத்தை மறித்து எங்கள் அனுமதியின்றி எப்படி உடலை ஏற்றலாம்? என கோ‌‌ஷங்கள் எழுப்பினர். இதையடுத்து போலீசார் அவர்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனர். நேரம் ஆகிவிட்டதால் பிரேத பரிசோதனை செய்யப்படாமல் மீண்டும் மீரா மைதீன் உடல் பிரேத கிடங்கிற்கு எடுத்து செல்லப்பட்டது.

இது குறித்து தஞ்சை தமிழ்ப்பல்கலைக்கழக போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. அதன் பேரில் போலீசார், பேராசிரியை சங்கீதா, துறை தலைவர் மகே‌‌ஷ் ஆகியோர் மீது மாணவரை திட்டி தற்கொலைக்கு தூண்டியதாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.-source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!