பார் ஊழியர் வெட்டிக்கொலை… பிரபல ரவுடி செய்த பயங்கரம்


சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே சுவர் விழுந்தது தொடர்பாக ஏற்பட்ட தகராறில் பார் ஊழியர் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.

சேலம் மாவட்டம் எடப்பாடி அருகே உள்ள தண்ணீர்தாசனூர் பகுதியில் டாஸ்மாக் கடையும், அதன் அருகிலேயே பாரும் செயல்பட்டு வருகிறது.

நேற்று நெடுங்குளம் பூமணியூரை சேர்ந்த பிரபல ரவுடியான துரைராஜ் என்பவர் இந்த பாருக்கு சென்று மது குடித்தார். அப்போது பாரின் பக்கவாட்டு சுவரில் துரைராஜ் சாய்ந்து உட்கார்ந்த போது திடீரென அந்த சுவர் சாய்ந்து விழுந்ததாக கூறப்படுகிறது.

இதனை பார்த்த பார் ஊழியர்களான எடப்பாடி ஆவத்திபாளையத்தை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 32), அண்ணாமலை (30) ஆகிய 2 பேரும் உன்னால் தான் சுவர் விழுந்தது என்று கூறி துரைராஜிடம் தகராறில் ஈடுபட்டனர். இதனால் அவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டது. அங்கிருந்தவர்கள் அவர்களை சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.

வீட்டிற்கு சென்ற துரைராஜ் ஆத்திரம் அடைந்தார். பார் ஊழியர்கள் தன்னை இப்படி பேசி விட்டார்களே என்று நினைத்த அவர் 2 பேரையும் தீர்த்துக்கட்ட முடிவு செய்தார். அதன்படி கருமலைக்கூடல் ரவுடி கும்பலை சேர்ந்த 7 பேரை அழைத்துக்கொண்டு இரவு 10.30 மணியளவில் அந்த பாருக்கு மீண்டும் சென்றார்.

பின்னர் கண்ணிமைக்கும் நேரத்தில் அந்த கும்பல் ராமமூர்த்தி, அண்ணாமலை ஆகிய 2 பேரையும் சுற்றி வளைத்து அரிவாளால் சரமாரியாக வெட்டியது. இதில் ரத்த வெள்ளத்தில் தரையில் விழுந்த ராமமூர்த்தி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதை பார்த்த அந்த கும்பல் அங்கிருந்து தப்பியோடி விட்டது.

படுகாயம் அடைந்த அண்ணாமலைக்கு கால் உள்பட பல பகுதிகளில் பலத்த அரிவாள் வெட்டு விழுந்தது. உயிருக்கு போராடிய அண்ணாமலையை அக்கம் பக்கத்தினர் மீட்டு எடப்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தகவல் அறிந்த சங்ககிரி டி.எஸ்.பி. தங்கவேல் மற்றும் தேவூர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கொலை செய்யப்பட்ட ராமமூர்த்தியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக எடப்பாடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து அந்த பகுதியில் அவரது உறவினர்கள் ஏராளமானோர் குவிந்ததால் அங்கு பரபரப்பு நிலவியது. இதையடுத்து அங்கு கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டனர். பிரேத பரிசோதனைக்கு பினனர் அவரது உடல் இன்று உறவினர்களிடம் ஒப்படைக்கப்படுகிறது.

இதற்கிடையே கொலையாளிகளை பிடிக்க சங்ககிரி டி.எஸ்.பி. தங்கவேல், தேவூர் இன்ஸ்பெக்டர் முத்துசாமி தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அந்த தனிப்படையினர் கொலையாளிகளை பிடிக்க தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

துரைராஜ் மீது ஏற்கனவே மேட்டூரில் ஒரு கொலை வழக்கு உள்பட மேலும் பல வழக்குகள் உள்ளது. கொலை செய்யப்பட்ட ராமமூர்த்திக்கு மேனகா என்ற மனைவியும், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். படுகாயம் அடைந்த அண்ணாமலைக்கு வித்யா என்ற மனைவியும் ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளது குறிப்பிடத்தக்கது.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!