இத்தாலியை புரட்டி எடுக்கும் கொரோனா… ஒரே நாளில் 168 பேர் பலி


இத்தாலியில் கொரோனாவுக்கு ஒரே நாளில் 168 பேர் உயிரிழந்துள்ளனர். இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 631 ஆக அதிகரித்துள்ளது.

சீனாவின் ஹூபேய் மாகாணம் வுகான் நகரில் கண்டுபிடிக்கப்பட்ட கொரோனா வைரஸ் தற்போது 100-க்கும் அதிகமான நாடுகளில் பரவி மக்களுக்கு பெரும் அச்சுறுத்தலாக விளங்கிவருகிறது.

கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு உலகம் முழுவதும் இதுவரை 4 ஆயிரத்துக்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். மேலும், 1 லட்சத்து 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பரவியுள்ளது.

இதற்கிடையில், சீனாவுக்கு அடுத்தபடியாக ஐரோப்பிய நாடான இத்தாலியில் தான் கொரோனா கோரத்தாண்டம் ஆடுகிறது.

அந்நாட்டின் அனைத்து மாகாணங்களிலும் (20) கொரோனா பரவியிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு இத்தாலியில் நேற்றுவரை 463 பேர் உயிரிழந்திருந்தனர்.

இந்நிலையில், கொரோனா வைரஸ் தாக்குதலுக்கு இத்தாலி நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 168 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதனால் அந்நாட்டில் வைரஸ் தாக்குதலுக்கு பலியானோர் எண்ணிக்கை 631 ஆக அதிகரித்துள்ளது. மேலும், 10 ஆயிரத்துக்கும் அதிகமானோருக்கு வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. ஒரே நாளில் கொரோனாவுக்கு 168 பேர் உயிரிழந்துள்ளதால் இத்தாலி மக்கள் மிகுந்த அச்சமடைந்துள்ளனர்.

இதற்கிடையில், கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருவதையடுத்து இத்தாலி நாடு முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டு மக்கள் வீடுகளை விட்டு வெளியேற தடை விதிக்கப்பட்டுள்ளது.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!