என் குடும்பத்தை நண்பன் சிதைத்து விட்டான் – ஆடியோ பதிவை வெளியிட்ட பஸ் டிரைவர் தற்கொலை


நண்பரால் தனது குடும்பம் சிதைந்து விட்டதாக சமூகவலைதளங்களில் ஆடியோ பதிவை வெளியிட்டு விட்டு பஸ் டிரைவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூத்துக்குடி மாவட்டம் ஆறுமுகநேரி ராஜமன்னியபுரத்தை சேர்ந்தவர் மகேஷ் (வயது 43), தனியார் பஸ் டிரைவர். இவரது மனைவி அருணா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன் -மனைவி இருவருக்கும் இடையே அடிக்கடி குடும்ப பிரச்சினை ஏற்பட்டு வந்துள்ளது.

இந்நிலையில் கடந்த 15 நாட்களுக்கு முன்பு மகேஷ் தனது மனைவியை விட்டு பிரிந்து அவரது தாயார் புஷ்பம் என்பவருடன் வசித்து வந்தார். பின்னர் அவர் நேற்றுமுன் தினம் இரவு புஷ்பத்திடம் மகன்களை பார்த்து விட்டு வருவதாக கூறி வீட்டில் இருந்து சென்றார்.

மகேஷ் சீனந்தோப்பு காட்டுப்பகுதியில் இருந்து கொண்டு உறவினர் ஒருவருக்கு போன் மூலம் மனவேதனையில் தான் வி‌ஷத்தை குடித்து விட்டதாக கூறினார். உடனடியாக உறவினர்கள் அங்கு விரைந்து சென்று, மயங்கிய நிலையில் இருந்து மகேஷை மீட்டு திருச்செந்தூர் அரசு மருத்துவ மனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே மகேஷ் பரிதாபமாக இறந்தார்.

இது குறித்து புஷ்பம் அளித்த புகாரின்பேரில் ஆறுமுகநேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் மகேஷ் தற்கொலை செய்வதற்கு முன்பு ஆடியோ ஒன்றை சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ளார்.

அந்த ஆடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது. அதில் ‘ நான் மகேஷ் என்று தன்னை அறிமுகப்படுத்தி கொள்கிறார். பின்னர் அவர் தூத்துக்குடி கலெக்டர் சந்தீப் நந்தூரிக்கும், போலீஸ் சூப்பிரண்டிற்கும் ஆடியோ மூலம் அளிக்கும் புகார் மனு என கூறியுள்ளார். நானும் எனது மனைவியும் மிகவும் சந்தோசமாக குடும்பம் நடத்தி வந்தோம்.

இந்நிலையில் எனது நண்பர் என் குடும்பத்தில் குறுக்கிட்டு எங்களது வாழ்க்கையை சிதைத்து விட்டார். எனக்கு என் நண்பன் செய்த செயல் மீளா துயரத்தை தந்தது. இதனால் நான் வேறு வழியின்றி தற்கொலை செய்து கொள்கிறேன் என அழுது கொண்டு கூறுகிறார்.

எனவே என் நண்பன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி முடிக்கிறார்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!