கொரோனாவை வென்ற 100 வயது முதியவர் – சீனாவில் சுவாரஸ்யம்..!


சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 100 வயது முதியவர், சிகிச்சைக்கு பிறகு முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.

சீனாவில் உருவான கொரோனா வைரஸ் 100-க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவி உலகையே அச்சுறுத்தி வருகிறது. இந்த கொடிய வைரசால் தினந்தோறும் மக்கள் கொத்து, கொத்ததாக செத்து மடிகின்றனர். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் முதியவர்களையே கொரோனா வைரஸ் எளிதில் தாக்குகிறது. அதேபோல் அதிக வயதுடையவர்களே பெரும்பாலும் கொரோனாவால் உயிரிழக்கின்றனர்.

இந்த நிலையில் சீனாவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 100 வயது முதியவர், சிகிச்சைக்கு பிறகு முழுமையாக குணமடைந்து வீடு திரும்பி இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. கொரோனாவின் பிறப்பிடமான உகான் நகரை சேர்ந்த அந்த முதியவருக்கு நோய் இருப்பது உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, கடந்த மாதம் 24-ந் தேதி அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

அந்த முதியவருக்கு கொரோனா தாக்குதல் தவிர, அல்சைமர் நோய், உயர் ரத்த அழுத்தம் மற்றும் இதய பிரச்சினைகள் போன்றவையும் இருந்துள்ளன. எனினும் தொடர்ந்து 13 நாட்களாக நோய் எதிர்ப்பு சக்திக்கான மருந்துகள் மற்றும் சீன பாரம்பரிய மருத்துவ முறையில் அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது.

இதன் பலனாக அவர் பூரண குணமடைந்து கடந்த சனிக்கிழமை வீடு திரும்பினார். இதன் மூலம், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அதில் இருந்து மீண்ட உலகின் மிகவும் வயதான நபர் என்ற பெயரை அவர் பெற்றுள்ளதாக சீன ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!