தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொண்ட போர்ச்சுக்கல் அதிபர்.. கொரோனா வைரஸ் பீதி..!


கொரோனா வைரஸ் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாளிகையில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்வதாக போர்ச்சுக்கல் அதிபர் மார்செலோ அறிவித்துள்ளார்.

சீனாவின் உகான் நகரில் தோன்றிய உயிர்க்கொல்லியான கொரோனா வைரஸ் பிற நாடுகளில் வேகமாக பரவி வருகிறது. அந்த வகையில் போர்ச்சுக்கலில் இதுவரை 25 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த நிலையில் தலைநகர் லிஸ்பனில் உள்ள ஒரு பள்ளிக்கூடத்தை சேர்ந்த மாணவர்கள் ஒரு குழுவாக அதிபர் மாளிகைக்கு சென்று அந்த நாட்டின் அதிபர் மார்செலோ ரெபெலோ டி சவுசாவை சந்தித்து பேசினர். அதனை தொடர்ந்து அந்த மாணவர்களோடு அதிபர் மார்செலோ குழு புகைப்படமும் எடுத்துக்கொண்டார்.

அதிபர் மாளிகைக்கு சென்று வந்த மாணவர்கள் படிக்கும் பள்ளிக்கூடத்தை சேர்ந்த ஒரு மாணவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு உள்ளது. இதையடுத்து, உடனடியாக அந்த பள்ளிக்கூடம் மூடப்பட்டது.

அதிபர் மாளிகையை பார்வையிட்ட மாணவர் குழுவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட மாணவர் இடம் பெறவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மாளிகையில் தன்னைத்தானே தனிமைப்படுத்திக்கொள்வதாக அதிபர் மார்செலோ அறிவித்தார்.

அதன்படி அவர் அனைத்து பொது நிகழ்ச்சிகளையும் ரத்து செய்துவிட்டு வீட்டிலேயே தங்கியுள்ளார். அதே சமயம் அவருக்கு கொரோனாவுக்கான அறிகுறிகள் எதுவும் இல்லை என அதிபர் மாளிகை தெரிவித்துள்ளது.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!