இணையதளத்தில் தகவல் சேகரித்து கோவில் விழாக்களில் கைவரிசை காட்டிய பெண்கள்..!


இணையதளம் மூலம் தகவல் சேகரித்து கோவில் விழாவில் நாடு முழுவதும் கைவரிசை காட்டிய பெண்களை போலீசார் கைது செய்தனர்.

கோவை கோனியம்மன் கோவில் தேரோட்டம் கடந்த 4-ந்தேதி நடந்தது. தேரோட்டத்தின் போது கூட்ட நெசலை பயன்படுத்தி சிங்காநல்லூர் உப்பிலிபாளையத்தை சேர்ந்த வனிதா (வயது 40) என்பவரிடம் 3½ பவுன் செயின், கவுண்டம்பாளையம் பிருந்தாவன் நகரை சேர்ந்த ரங்கநாயகி (61) என்பவரிடம் 3 பவுன் செயின், புலியகுளத்தை சேர்ந்த அம்சவேணி (65) என்பவரிடம் 1 பவுன் செயின், வைசியாள் வீதியை சேர்ந்த மகேஸ்வரி (65) என்பவரிடம் 1 பவுன் செயின் உள்பட மொத்தம் 10 பேரிடம் இருந்து 35 பவுன் நகைகள் பறிக்கப்பட்டது.

நகையை பறிகொடுத்தவர்கள் இது குறித்து பெரியக்கடை வீதி, உக்கடம் போலீசில் புகார் செய்தனர். புகாரின் பேரில் குற்றப்பிரிவு துணை கமி‌ஷனர் உமா உத்தரவின் பேரில் உதவி கமி‌ஷனர் ராஜ்குமார் மேற்பார்வையில் சிறப்பு குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் மாரிமுத்து தலைமையில் ஏட்டுகள் உமா, கார்த்தி, பூபதி உள்பட போலீசார் தீவிர விசாரணை நடத்தினர். தேரோட்டம் சென்ற பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமிராவில் பதிவான காட்சிகளை போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது 3 பெண்கள் அங்கும் இங்குமாக சுற்றி வந்து செயின் பறிப்பில் ஈடுபட்டது தெரிய வந்தனர்.

இதனை வைத்து போலீசார் செயின் பறிப்பில் ஈடுபட்ட திருச்சூரை சேர்ந்த பாண்டிய ராஜன் என்பவரது மனைவி இந்துமதி (27), இலங்கை கொழும்புவை சேர்ந்த ரஞ்சித்குமார் மனைவி பராசக்தி (36), லண்டனை சேர்ந்த சின்னத்தம்பி மனைவி செல்வி(36) ஆகியோரை கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 20 பவுன் நகைகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.

கைதான 3 பெண்களும் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

நாங்கள் 3 பேரும் உறவினர் முறையில் அக்கா, தங்கைகள். 3 பேரும் இணையதளத்தில் இந்தியா முழுவதும் எங்கு திருவிழாக்கள் நடைபெறுகிறது என்று பார்ப்போம். பின்னர் லண்டன், கொழும்பில் இருந்து விமானத்தில் பறந்து சென்று விழாக்கள் நடைபெறும் பகுதிக்கு சென்று அறை எடுத்து தங்கி, விழாக்கள் நடைபெறும் கோவில்களுக்கு சென்று சுற்றிப்பார்ப்போம்.

பின்னர் விழாவின் போது கூட்டத்தில் நுழைந்து நகைகளை பறிப்போம். பின்னர் அவரவர் வீடுகளுக்கு சென்று விடுவோம்.

நாங்கள் நாடு முழுவதும் பல்வேறு விழாக்களில் நுழைந்து கைவரிசையை காட்டியுள்ளோம். கடந்த மாதம் தஞ்சை பெரிய கோவில் கும்பாபிஷேகத்துக்கு சென்று நகை பறிப்பில் ஈடுபட்டோம். கோனியம்மன் கோவில் தேரோட்டத்தின் போது கூட்டத்தில் நுழைந்து செயின்களை பறித்தோம். போலீசார் விசாரணை நடத்தி எங்களை கைது செய்து விட்டனர்.

இவ்வாறு அவர்கள் அளித்த வாக்குமூலத்தில் கூறினர்.

இவர்கள் திருப்பதி, புதுச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் செயின் பறிப்பில் ஈடுபட்ட போது கைதாகி வெளியே வந்துள்ளனர். மேலும் 10 பவுன் செயினுடன் தப்பி சென்ற இந்துமதியின் கணவர் பாண்டிய ராஜனை போலீசார் தேடி வருகின்றனர். இவர்களின் பாஸ்போர்ட்டை பறிமுதல் செய்த போலீசார் அதனை முடக்கும் நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்கள்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!