பிரதமர் மோடியின் அழைப்பை நிராகரித்தது ஏன்? பருவநிலை மாற்ற ஆர்வலர் பதில்


சாதனை பெண்கள் பிரசாரத்தில் சேர பிரதமர் மோடியின் அழைப்பை நிராகரித்தது ஏன் என்பது குறித்து 8 வயது பருவநிலை மாற்ற ஆர்வலர் பதில் அளித்துள்ளார்.

சர்வதேச மகளிர் தினத்தையொட்டி சாதனை பெண்கள் தங்கள் வாழ்க்கை அனுபவங்களை டுவிட்டர் தளத்தில் பகிரும் வகையில் பிரசாரம் ஒன்று உருவாக்கப்பட்டு உள்ளது. ‘அவள் நமக்கு உத்வேகம் அளிக்கிறாள்’ என்ற பெயரில் நடைபெறும் இந்த பிரசாரத்தில் இணையுமாறு மணிப்பூர் மாநில பருவநிலை மாற்ற ஆர்வலரும், இந்தியாவின் கிரேட்டா என அழைக்கப்படுபவருமான 8 வயது லிசிபிரியா கங்குஜமுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்திருந்தார்.

ஆனால் இந்த அழைப்பை லிசிபிரியா நிராகரித்து விட்டார். இது தொடர்பாக அவர் கூறுகையில், ‘இந்த கவுரவத்துக்காக முதலில் நான் மகிழ்ச்சியும், துக்கமும் அடைந்தேன். பின்னர், பருவநிலை மாற்றத்தை அரசியல்வாதிகள் தீவிரமாக எடுத்துக்கொள்ளாததால், இந்த கவுரவத்தை நிராகரிப்பது என முடிவு செய்தேன்’ என்று கூறினார்.

பருவநிலை மாற்றம் தொடர்பாக ஆயிரக்கணக்கான குழந்தைகள் மற்றும் இளைஞர்களுடன் நாடாளுமன்றத்துக்கு முன்பும், நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஆண்டு முழுவதும் போராட்டம் நடத்தியும் யாரும் அவற்றை கண்டுகொள்ளவில்லை எனவும் அவர் குற்றம் சாட்டினார்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!