இதுவரை 3380 பேர் பலி… உலகை அச்சுறுத்தும் கொரோனா… பீதியில் மக்கள்..!


கொரோனா வைரஸ் பாதிப்பினால் உலக அளவில் 3380 பேர் பலியாகி உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2873 புதிய நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து பரவத் தொடங்கிய ஆட்கொல்லி கொரோனா வைரஸ் சீனா மட்டுமின்றி உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. சீனாவில் மிகப்பெரிய மனித பேரழிவை ஏற்படுத்தி உள்ள இந்த நோய், சீனாவுக்கு வெளியே சுமார் 90 நாடுகளில் பரவி உள்ளது. உலக அளவில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டடோர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் சீனாவில் நேற்று மேலும் 28 பேர் உயிரிழந்தனர். இதனால் பலி எண்ணிக்கை 3070 ஆக உயர்ந்துள்ளது. நேற்று புதிதாக 99 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இருக்கிறார்கள். இவர்களில் 74 பேர் ஹுபெய் மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். மத்திய மாகாணத்தைச் சேர்ந்தவர்கள் 25 பேர் ஆவர். ஹுபெய் மாகாணத்தில் நோய்த்தொற்று கடந்த சில வாரங்களாக குறைந்துள்ளது.

சீனாவுக்கு வெளியே இத்தாலியில் மேலும் 49 பேர் கொரோனா வைரசால் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் அங்கு உயிரிழப்பு 197 ஆக உயர்ந்துள்ளது. 4636 பேர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

உலகம் முழுவதும் கொரோனா வைரசுக்கு 3380 பேர் பலியாகியிருப்பதாக உலக சுகாதார அமைப்பு கூறியுள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 2873 புதிய நோயாளிகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உலக அளவில் 98192 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருப்பதாகவும், சீனாவில் மட்டும் 80711 பேர் பாதிக்கப்பட்டிருப்பதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!