கொரோனா பீதி.. தமிழகத்தில் வரலாறு காணாத வகையில் முகக்கவசங்கள் விலை ‘கிடுகிடு’ உயர்வு


கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக உள்ளதால் முகக்கவசங்களின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது.

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் அச்சுறுத்தி வருகிறது. இந்தியாவில் 28 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. நாடு முழுவதும் விமான நிலையம், துறைமுகம் உள்ளிட்டவைகளில் தீவிர சோதனைக்கு பின்னரே பயணிகள் வெளியே அனுமதிக்கப்படுகின்றனர்.

தமிழகத்தில் கொரோனா பாதிப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அனைத்து முக்கிய அரசு மருத்துவமனைகளில் பிரத்யேக ‘வார்டு’ அமைக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளது. இங்கு நேற்று வரை 54 பேரின் ரத்த மாதிரிகள் எடுக்கப்பட்டு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இதில் யாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என தெரியவந்துள்ளது.

மேலும் தமிழகத்தில் கொரோனா வைரஸ் குறித்த தகவல் தெரிவிக்க 044-29510400, 044-29510500, 94443 40496, 87544 48477 ஆகிய உதவி எண்களை தொடர்பு கொள்ளலாம் என சுகாதாரத்துறை அறிவித்துள்ளது. இந்தநிலையில் உலகம் முழுவதும் முகக்கவசம், கை உறை, தனிநபர் பாதுகாப்பு உடை உள்ளிட்ட தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களுக்கு தற்போது தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக உலக சுகாதார நிறுவனம் அறிவித்துள்ளது.

தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களின் உற்பத்தியை 40 சதவீதம் அதிகரிக்க வேண்டும் எனவும் அது வலியுறுத்தி உள்ளது. இந்த உபகரணங்கள் தட்டுப்பாடு அதிகரித்தால் மருத்துவ சேவை வழங்கும் ஊழியர்களின் நிலை கேள்விக்குறியாகி விடும் என அச்சம் ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரசின் தாக்கம் அதிகமாக உள்ளதால் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களின் விலை வரலாறு காணாத வகையில் அதிகரித்துள்ளது.

அறுவை சிகிச்சை முகக்கவசத்தின் விலைகள் 6 மடங்காகவும், வைரஸ் பாதிப்பை தடுக்கும் என்-95 முகக்கவசம் 3 மடங்காகவும், தனிநபர் பாதுகாப்பு உடை 2 மடங்காகவும் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது.

மேலும் பல நிறுவனங்கள் தனிநபர் பாதுகாப்பு உபகரணங்களின் தட்டுப்பாட்டை அதிகரித்து அதிக விலைக்கு விற்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

தமிழக அரசு மருத்துவமனைகளில் தனிநபர் உபகரணங்கள் போதிய அளவு இருப்பு வைக்கப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இந்தியாவிலும் என்-95 வகை முகக்கவசங்களின் விலை அதிகரிக்க தொடங்கியுள்ளது. சென்னையில் ரூ.150 முதல் ரூ.250 வரை விற்கப்பட்டு வந்த ஒரு முகக்கவசம், நேற்று ரூ.350 முதல் ரூ.700 வரை விற்கப்பட்டது.

மேலும் இந்த விலை அதிகரிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே இந்த முகக்கவசங்கள் வாங்குவது என்பது ஏழைகளுக்கு எட்டாக் கனியாகவே உள்ளது. இந்த விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் அரசுக்கு கோரிக்கை வைத்துள்ளனர்.-source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!