2 மாத பெண் குழந்தை கழுத்தை நெரித்து கொலை… தாய் உள்பட 4 பேர் அதிரடி கைது..!


பாபநாசம் அருகே மறுமணத்திற்கு இடையூறாக இருந்ததால் 2 மாத பெண் குழந்தையை கழுத்து நெரித்து கொலை செய்த தாய் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

நாகை மாவட்டம் மயிலாடுதுறை அருகே உள்ள மண்ணம்பந்தல் மூங்கில்தோட்டம் மெயின் ரோட்டை சேர்ந்தவர் கணேசன்(வயது35). கூலித்தொழிலாளி. இவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் பாபநாசம் அருகே உள்ள ராஜகிரி மேலத்தெருவைச் சார்ந்த பைரோஸ்பானு என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்தார். இவர்களுக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தையும், 2 மாத பெண்குழந்தையும் இருந்தது. தற்போது கணேசன் தனது குடும்பத்துடன் பாபநாசம் அருகே உள்ள திருப்பாலத்துறையில் வசித்து வருகிறார்.

சம்பவத்தன்று கணேசன் தனது சொந்த ஊரான மயிலாடுதுறைக்கு சென்றிருந்தார். அப்போது பைரோஸ்பானு தனது கணவரை செல்போனில் தொடர்பு கொண்டு தங்களது 2 மாத பெண் குழந்தை இறந்து விட்டதாக கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த கணேசன் திருப்பாலத்துறைக்கு வந்தார். பின்னர் அவர் தனது குழந்தை சாவில் மர்மம் உள்ளதாக பாபநாசம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் சந்தேக மரணம் என வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் தஞ்சையிலிருந்து டபி என்ற மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது. அந்த நாய் திருப்பாலைத்துறை வீட்டிலிருந்து 1 கிலோ மீட்டர் ஓடி வந்து பாபநாசம் போலீஸ் நிலையத்தில் நின்றது. தடய அறிவியல் நிபுணர் ராஜேந்திரன் வந்து கைரேகைகளை பதிவு செய்தார். அதனை தொடர்ந்து கமர்நி‌ஷா உடல் பாபநாசம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டது.

இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், திருபுவனத்தை சேர்ந்த முகமது தல்கா என்பவருக்கு பைரோஸ்பானுவை மறுமணம் செய்து வைக்க அவரது தந்தை அக்பர்அலி முடிவு செய்திருந்தார். இதற்கு இடையூறாக 2 மாத பெண் குழந்தை கமர்நி‌ஷா இருந்துள்ளார். இதனால் அந்த குழந்தையை கொலை செய்ய அக்பர்அலி, அவரது மனைவி மதீனாபீவி(47), தாய் பைரோஸ்பானு(28), அக்பர்அலி நண்பர் முகமது தல்கா(46) ஆகிய 4 பேரும் திட்டம் தீட்டினர். இதையடுத்து 2 மாத குழந்தை கமர்நி‌ஷாவை துணியால் கழுத்தை நெரித்து கொலை செய்துள்ளனர் என்று போலீசார் தெரிவித்தனர்.

இதுகுறித்து பாபநாசம் போலீஸ் துணை சூப்பிரண்டு நந்தகோபால், இன்ஸ்பெக்டர் துர்கா, சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துகுமார், செல்வராணி, தலைமை காவலர்கள் சம்பத், மதியழகன் ஆகியோர் கொலை வழக்குப்பதிவு செய்து 4 பேரையும் கைதுசெய்து பாபநாசம் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். மாஜிஸ்திரேட்டு சிவக்குமார் 4 பேரையும் 15 நாள் காவலில் வைக்க உத்தரவிட்டார். பின்னர் 4 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.-source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!