வடகொரிய தலைவர் கிம் ஜாங் மனநலம் பாதிக்கப்பட்டவரா..? வெள்ளை மாளிகை கேள்வி..!


உலக நாடுகளின் கடும் எதிர்ப்புகளை மீறி அடாவடியாக அணு ஆயுத சோதனை மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வருகிறது. வடகொரியாவின் இந்த நடவடிக்கை அமெரிக்கா மற்றும் அதன் நட்பு நாடுகளுக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது. இந்த சூழலில், சமீப காலமாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புக்கும் வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன்னுக்கும் இடையே வார்த்தைப்போர் முற்றியுள்ளது. இந்த நிலையில், புத்தாண்டு தினத்தன்று உரையாற்றிய வடகொரிய அதிபர் கிம் ஜாங் உன், அமெரிக்காவை தாக்கி அழிப்பதற்கான அணு ஆயுதங்களும், அந்த ஆயுதங்களை அமெரிக்கா வரை ஏந்திச்செல்லக்கூடிய ஏவுகணைகளும் தங்களிடம் இருப்பதாகவும், இவற்றை இயக்குவதற்கான பொத்தான் தனது மேஜையில் எப்போதும் தயாராக இருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்தார்.


வடகொரியாவின் இந்த அறிவிப்புக்கு பதிலடி கொடுக்கும் வகையில், கடந்த சில தினங்களுக்கு முன் பேசிய அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், வடகொரிய அதிபர் தன்னிடம் எப்போதும் அணு ஆயுதங்களை இயக்க கூடிய பொத்தான் இருப்பதாக கூறியுள்ளார். அவரிடம் இருப்பதை விட மிகவும் பெரிதான சக்தி வாய்ந்த அணு ஆயுத கட்டுப்பாடு அமெரிக்காவிடம் இருப்பதை, மக்களிடம் பட்டினியால் தவிக்க விட்டு அணு ஆயுத தயாரிப்பில் ஈடுபடும் வடகொரிய அதிபரிடம் சொல்லுங்கள் என தெரிவித்து இருந்தார். இவ்வாறாக இரு தலைவர்களுக்கும் இடையே, வார்த்தைப்போர் முற்றியுள்ள நிலையில், அமெரிக்க அதிபர் மாளிகையான வெள்ளை மாளிகை, கிம் ஜாங் உன் மனநலம் குறித்து கேள்வி எழுப்பியுள்ளது.

வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர்,சாரா சண்டர்ஸ் தனது வழக்கமான செய்தியாளர்கள் சந்திப்பில் பேசுகையில், கிம் ஜாங் உன் குறித்து கடுமையான விமர்சனத்தை முன்வைத்தார். சாரா சண்டர்ஸ் கூறுகையில், “ வடகொரிய தலைவரின் மனநலம் குறித்து அமெரிக்க அதிபரும் மக்களும் கவலைப்படுகின்றனர். ஏனெனில், தொடர்ந்து அவர் அச்சுறுத்தலில் ஈடுபட்டு வருகிறார். பல ஆண்டுகளாக ஏவுகணை சோதனைகளை மீண்டும் மீண்டும் நடத்தி வருகிறார்” என்று தெரிவித்துள்ளார்.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!