மூதாட்டியை மரக் கட்டையால் தாக்கி கொலை… அதிர வைத்த காரணம்..!


புதுவை அருகே மூதாட்டியை மரக் கட்டையால் தாக்கி கொலை செய்த வடமாநில சைக்கோ வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

புதுவையை அடுத்த தமிழக பகுதியான திருச்சிற்றம்பலம் கூட்டு ரோடு சேதராப்பட்டு சாலையை சேர்ந்தவர் லட்சுமணன். இவரது மனைவி அங்கம்மாள் (வயது 75).

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு லட்சுமணன் இறந்து விட்ட நிலையில் அங்கம்மாள் தனது மகன் முனிசாமி பராமரிப்பில் இருந்து வந்தார். இதற்கிடையே கடந்த மாதம் முனிசாமியும் இறந்து போனார்.

தினமும் இரவு வேளையில் அங்கம்மாள் வீட்டின் அருகே உள்ள கடை வாசலில் தூங்குவது வழக்கம். அது போல் கடந்த சில நாட்களுக்கு முன்பு இரவு அங்கம்மாள் கடை வாசலில் தூங்கினார்.

அப்போது நள்ளிரவு ஒரு வாலிபர் அங்கம்மாள் தூங்கிக்கொண்டு இருந்த இடத்தின் அருகே அமர்ந்தார். திடுக்கிட்டு எழுந்த அங்கம்மாள் அந்த வாலிபர் திருடன் போல் இருந்ததால் அவரை அங்கிருந்து செல்லுமாறு கூறினார்.

இதனால் ஆத்திரம் அடைந்த அந்த வாலிபர் அருகில் கிடந்த மரக்கட்டையை எடுத்து அங்கம்மாளை சரமாரியாக தாக்கினார். இதனால் வலி தாங்காமல் அங்கம்மாள் அலறினார்.

இந்த அலறல் சத்தம் கேட்டு அருகில் கூட்டுறவு வங்கியில் காவல் பணியில் ஈடுபட்டு இருந்த காவலாளிகள் ஓடிவந்தனர். அங்கு அங்கம்மாளை தாக்கிய வாலிபர் வெறிபிடித்தவர் போல் மரக்கட்டையுடன் நின்றிருந்ததை பார்த்து பயந்து போன காவலாளிகள் இதுபற்றி ஆரோவில் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) மைக்கேல் இருதயராஜ் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர்.

படுகாயத்துடன் கிடந்த அங்கம்மாளை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மர் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த அங்கம்மாள் சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பரிதாபமாக இறந்து போனார்.

இதையடுத்து போலீசார் இந்த வழக்கை கொலை வழக்காக பதிவு செய்து அங்கம்மாளை தாக்கி கொலை செய்த வாலிபரை பிடித்து விசாரணை நடத்தினர்.

விசாரணையில் அவர் மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவை சேர்ந்த டெரிஜெர்மி (வயது 25) என்பது தெரிய வந்தது.

மேலும் நடத்திய விசாரணையில் டெரி ஜெர்மி மனநிலை பாதிக்கப்பட்ட சைக்கோ வாலிபர் என்பது தெரிய வந்தது.

கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு டெரிஜெர்மியும், அவரது தந்தை மைக்கேலும் வேலை தேடி ஆரோவில் அருகே குயிலாப்பாளையத்துக்கு வந்துள்ளனர்.

அங்குள்ள ஒரு ஓட்டலில் இருவரும் வேலை செய்து வந்த நிலையில் வாடிக்கையாளர்களை இருவரும் சரியாக கவனிக்காததால் அவர்களை ஓட்டல் நிர்வாகத்தினர் வேலையில் இருந்து நிறுத்தி விட்டனர்.

அதன் பிறகு இருவரும் அங்கேயே வேலை தேடி வந்த நிலையில் திடீர், திடீரென டெரி ஜெர்மி சைக்கோவாக மாறி தந்தையிடம் அடிக்கடி தகராறு செய்து வந்தார்.

ஒரு முறை டெரி ஜெர்மி ஆத்திரம் அடைந்து அவரது தந்தையை தாக்கி கொல்ல முயன்றார். இதனால் உயிருக்கு பயந்து அவரது தந்தை மைக்கேல் சொந்த ஊருக்கு சென்று விட்டார். ஆனால், டெரி ஜெர்மி மட்டும் ஆரோவில் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் சுற்றி திரிந்து வந்தார்.

சம்பவத்தன்று இரவு டெரி ஜெர்மி ஆரோவில்லில் இருந்து திருச்சிற்றம்பலம் கூட்டு ரோட்டில் வந்த போது தன்னை திருடனாக நினைத்து அங்கம்மாள் திட்டியதால் ஆத்திரம் அடைந்து அவரை மரக்கட்டையால் தாக்கியது விசாரணையில் தெரிய வந்தது.

இதையடுத்து டெரி ஜெர்மியை கைது செய்ய ஆரோவில் போலீசார் பின்னர் வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி கடலூர் ஜெயிலில் அடைத்தனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!