கொரோனா வைரஸ் தாக்கி பலியானோர் எண்ணிக்கை ஈரானில் 12 ஆக உயர்வு


ஈரானில் கொரோனா வைரஸ் தாக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது என ஈரான் அரசு அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது.

சீனாவில் ஹுபெய் மாகாணம் வுகான் நகரில் இருந்து கடந்த டிசம்பர் மாதம் பரவத் தொடங்கிய கொரோனா வைரஸ் நாடு முழுவதிலும் பரவி, பெருமளவிலான உயிரிழப்பை ஏற்படுத்தி உள்ளது.

கொரோனா வைரஸ் பரவுவது தற்போது குறைய தொடங்கியுள்ளது. எனினும், மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை கூடிக்கொண்டே செல்கிறது.

சீனாவில் கொரோனா வைரஸ் பாதிப்புக்கு பலியானோரின் எண்ணிக்கை 2592 ஆக உயர்ந்திருப்பதாக சுகாதாரத்துறை அதிகாரிகள் அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளனர். மேலும் 77 ஆயிரத்து 150 பேர் இந்த வைரசால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில், மத்திய கிழக்கு நாடுகளின் ஒன்றான ஈரானில் உள்ள குவாம் நகரில் கொரோனா பரவியத்தொடங்கியது. இந்த வைரஸ் தாக்குதலுக்கு உயிரிழந்தோர் எண்ணிக்கை 12 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டு சுகாதாரத்துறை அதிகாரப்பூர்வமாக தெரிவித்துள்ளது. மேலும், 61 பேருக்கு வைரஸ் பரவி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதற்கிடையில், ஈரானில் உள்ள ஒரு செய்தி தொலைக்காட்சிக்கு பேட்டியளித்த குவாம் நகரின் பாராளுமன்ற உறுப்பினர் அகமது அமீரபடி ஃப்ரூஹனி, கொரோனா தாக்குதலுக்கு 50 பேர் உயிரிழந்துள்ளதாகவும், 250-க்கும் மேற்பட்டோருக்கு வைரஸ் பாதிப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.

அவர் கூறும் கருத்துக்கு எந்த வித ஆதாரமும் அவர் சமர்ப்பிக்கவில்லை. மேலும், அகமது அமீரபடி ஃப்ரூஹனியின் கொரோனா பலி எண்ணிக்கை தொடர்பான கருத்துக்கு ஈரான் அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.

வைரஸ் பரவுவதை தடுக்க அந்நாட்டில் உள்ள 10-க்கும் அதிகமான மாகாணங்களில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட அனைத்து கல்வி மையங்களும் தற்காலிமாக மூடப்பட்டு உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!