தலை துண்டித்து என்ஜினீயர் படுகொலை – கம்பம் அருகே பயங்கரம்..!


கம்பம் அருகே தலை துண்டித்து என்ஜினீயர் படுகொலை செய்யப்பட்டார். சாக்குமூட்டையில் உடலை கட்டி முல்லைப்பெரியாற்றில் வீசிய தாய்-தம்பியிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இது குறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

தேனி மாவட்டம் கம்பத்தில் இருந்து சுருளிப்பட்டி செல்லும் சாலையில், தொட்டமன்துறை பகுதி வழியாக முல்லைப்பெரியாறு செல்கிறது. நேற்று முன்தினம் இரவு தொட்டமன்துறை தடுப்பணை அருகே முல்லைப்பெரியாற்றில் வாலிபர்கள் சிலர், மீன் பிடித்து கொண்டிருந்தனர்.

அப்போது இரவு 10 மணி அளவில் அங்கு ஒரு மோட்டார் சைக்கிளில் வாலிபர் ஒருவரும், பெண்ணும் வந்தனர். அவர்கள், சாக்கு மூட்டை ஒன்றை வைத்திருந்தனர். பின்னர் தொட்டமன்துறை தடுப்பணை பகுதியில், அந்த சாக்கு மூட்டையை வீசி விட்டு அவர்கள் சென்று விட்டனர். இதனை பார்த்த வாலிபர்களுக்கு அவர்கள் மீது சந்தேகம் ஏற்பட்டது.

இதுகுறித்து கம்பம் தெற்கு போலீஸ் நிலையத்துக்கு வாலிபர்கள் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். பின்னர் அங்கு கிடந்த சாக்கு மூட்டையை கைப்பற்றினர். அந்த மூட்டையை பிரித்து பார்த்தபோது போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். அதற்குள், 30 வயது உடைய வாலிபரின் உடல் இருந்தது. அதில் கை, கால்கள் மற்றும் தலை துண்டிக்கப்பட்டிருந்தது.

இதனால் அந்த வாலிபர் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது. இதுகுறித்து தகவல் அறிந்த தேனி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சாய்சரண் தேஜஸ்வி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டார். மேலும் தேனியில் இருந்து மோப்ப நாய் லக்கி வரவழைக்கப்பட்டு சோதனை செய்யப்பட்டது.

தடுப்பணையில் இருந்து நாராயணத்தேவன்பட்டி செல்லும் சாலையில் உள்ள சின்னவாய்க்கால் வரை மோப்ப நாய் ஓடி நின்றது. ஆனால் அது யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. இதையடுத்து தலை இல்லாத அந்த வாலிபரின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். சாக்கு மூட்டைக்குள் வாலிபரின் உடல் மட்டும் இருந்ததால், அவர் யார்? எதற்காக கொலை செய்யப்பட்டார்? என்று கண்டுபிடிப்பதில் போலீசாருக்கு சிக்கல் ஏற்பட்டது. மேலும் அந்த வாலிபரின் கை, கால்கள், தலை எங்கே? என்பதை தேடும் பணியில் போலீசார் ஈடுபட்டனர்.

கம்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்திய இந்த கொலையில் துப்புத்துலக்குவதற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் சிலைமணி, முத்துமணி ஆகியோர் தலைமையில் 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. இந்த தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

குறிப்பாக கம்பம் நாட்டுக்கல், போக்குவரத்து சிக்னல், காந்தி சிலை, வ.உ.சி. திடல், வாய்க்கால் தெரு, காமயகவுண்டன்பட்டி சாலை, சுருளிப்பட்டி, நாராயணத்தேவன்பட்டி ஆகிய இடங்களில் முக்கிய சாலை சந்திப்புகளில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராக்களை போலீசார் ஆய்வு செய்தனர்.

மேலும் மீன்பிடித்த வாலிபர்கள் கூறிய தகவலின் பேரிலும், கண்காணிப்பு கேமராவில் பதிவாகியிருந்த காட்சிகளையும் துருப்பு சீட்டாக கொண்டு போலீஸ் விசாரணை முடுக்கி விடப்பட்டது. போலீசார் நடத்திய விசாரணையில், தொட்டமன்துறை தடுப்பணை பகுதியில் இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிளில் சாக்கு மூட்டையுடன் வந்தவர்கள் பற்றி துப்புத்துலங்கியது.

அதாவது கம்பம் நந்தகோபாலன் கோவில் தெற்கு வாசல்தெருவை சேர்ந்த ராஜா மனைவி செல்வி (வயது 49), அவருடைய இளைய மகன் விஜய்பாரத் (25) ஆகியோர் முல்லைப்பெரியாற்றில் சாக்குமூட்டையை வீசியதை போலீசார் கண்டுபிடித்தனர். இதனையடுத்து 2 பேரையும் பிடித்து போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணை நடத்தினர்.

அதில் கொலை செய்யப்பட்ட வாலிபர், செல்வியின் மூத்த மகன் விக்னேஷ்வரன் (30) என்று தெரியவந்தது. என்ஜினீயரான இவர், கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். இவருக்கு இன்னும் திருமணம் ஆகவில்லை. திருமணத்துக்காக பெண் பார்த்து வந்தனர்.

அவருடைய தம்பியான விஜய்பாரத்தும் என்ஜினீயர் தான். இவரும், கோவையில் தான் பணிபுரிகிறார். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவருக்கு திருமணம் நடந்தது. தான் காதலித்த பெண்ணையே அவர் திருமணம் செய்து கொண்டார். அங்குள்ள ஒரு கோவிலில் வைத்து எளியமுறையில் திருமணம் நடந்தது.

தம்பியின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக, கோவையில் இருந்து தனது சொந்த ஊருக்கு விக்னேஷ்வரன் கடந்த சில தினங்களுக்கு முன்பு வந்தார். அதன்பிறகு அவர் கோவைக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட விக்னேஷ்வரனின் கை, கால்கள், தலை குறித்த விசாரணையில் போலீசார் ஈடுபட்டனர். அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது. அதாவது, கம்பத்தில் இருந்து 3 கிலோமீட்டர் தொலைவில் உள்ள, வீரப்பநாயக்கன்குளம் அருகே தனியாருக்கு சொந்தமான கிணற்றில் தலையை வீசி இருப்பது தெரியவந்தது.

அதன்பேரில் தீயணைப்பு படையினர் மற்றும் போலீசார் அங்கு சென்றனர். அந்த கிணற்றுக்குள், கேமராவை செலுத்தி தலை கிடக்கும் இடத்தை கண்டுபிடித்தனர். அதன்பிறகு இரும்பினால் ஆன கொக்கி மூலம், கிணற்றில் இருந்து தலையை தீயணைப்பு படையினர் வெளியே தூக்கினர். அந்த தலையையும் கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இதேபோல் கம்பம் காந்திநகர் மேற்கு பகுதியில் உள்ள மற்றொரு கிணற்றுக்குள் விக்னேஷ்வரனின் கை, கால்களை வீசியதாக கூறப்படுகிறது. அவற்றை மீட்கும் பணியில் தீயணைப்பு படையினர் ஈடுபட்டனர். ஆனால் இரவு நேரமாகி விட்டதால், இன்று (செவ்வாய்க்கிழமை) கை, கால்களை கிணற்றில் இருந்து வெளியே எடுக்க உள்ளனர்.

விக்னேஷ்வரன் மிகவும் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளார். அவரை கொலை செய்ததற்கான சுவடுகளே தெரியாத அளவுக்கு தடயங்களை மறைக்கும் வகையில் கொலையாளிகள் செயல்பட்டுள்ளனர். கை, கால்கள், தலையை துண்டித்து ஆங்காங்கே உள்ள நீர்நிலைகளில் வீசியுள்ளனர்.

மேலும் அவருடைய உடலுடன், குடல் கூட இல்லை என்று கூறப்படுகிறது. அதனை என்ன செய்தார்கள்? என்பது குறித்த விசாரணையில் போலீசார் ஈடுபட்டுள்ளனர். ஒரு இடத்தில் வைத்து அவரை கொலை செய்து, உடல் உறுப்புகளை தனித்தனியாக அரிவாளால் துண்டித்துள்ளனர். அதன்பிறகு ஒவ்வொன்றாக வீசி இருக்கிறார்கள்.

முல்லைப்பெரியாறு தடுப்பணையில் சாக்குமூட்டையுடன் உடலை வீசியதை வாலிபர்கள் பார்த்ததால் தாய்-மகன் சிக்கி கொண்டனர். மனதை கல்லாக்கி கொண்டு, கொடூரமான முறையில் விக்னேஷ்வரனை கொலை செய்யும் அளவுக்கு அவர் என்ன தவறு செய்தார்? என்பது புரியாத புதிராகவே உள்ளது. இது தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணையில் இறங்கியுள்ளனர்.

மேலும் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!