அரசு ஆஸ்பத்திரியில் பெண் நோயாளியின் கணவர் அடித்துக் கொலை..!


தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் பெண் நோயாளியின் கணவரை காவலாளி அடித்துக் கொலை செய்த சம்பவம் குறித்து அவரது உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திக்கணங்கோடு அருகே மாங்கோடு, பனவிளையைச் சேர்ந்தவர் மரிய சுரேஷ், (வயது 39), கூலித்தொழிலாளி.

மரியசுரேஷின் மனைவி கஸ்தூரி. இவருக்கு உடல்நலகுறைவு ஏற்பட்டது. இதற்காக தக்கலை அரசு ஆஸ்பத்திரிக்கு மனைவி கஸ்தூரியை, மரிய சுரேஷ் அழைத்து சென்றார்.

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள், கஸ்தூரியை உள்நோயாளியாக அனுமதித்து சிகிச்சை அளித்து வந்தனர். மனைவி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டதால், அவரை கவனித்து கொள்ள மரிய சுரேசும் ஆஸ்பத்திரியிலேயே தங்கி இருந்தார்.

தக்கலை அரசு ஆஸ்பத்திரியில் உள்நோயாளியாக இருப்போரை சந்திக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் தேவையற்ற நபர்கள் யாரும் உள்நோயாளிகள் பிரிவில் தங்கியிருக்க அனுமதிப்பதில்லை.

இதனை கண்காணிக்க தனியார் செக்யூரிட்டி பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள், ஆஸ்பத்திரி வாயில் முன்பும், காவல் பணியில் ஈடுபடுவார்கள்.

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் கஸ்தூரியின் கணவர் மரிய சுரேஷ், ஆஸ்பத்திரி விதிகளை மீறி நடந்து கொண்டதாக தெரிகிறது. கடந்த 9-ந்தேதி இரவு மரிய சுரேஷ் ஆஸ்பத்திரி முன்பு காவல் பணியில் ஈடுபட்ட காவலாளி ரத்தினராஜூடன் (26) தகராறில் ஈடுபட்டார்.இதில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பிரச்சினை முற்றியதில் ஆத்திரம் அடைந்த காவலாளி ரத்தினராஜ், தொழிலாளி மரிய சுரேசை சரமாரியாக தாக்கினார். படுகாயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்தார்.

அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த மரிய சுரேஷ், இன்று அதிகாலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார்.

இதற்கிடையே மரிய சுரேசுடன் தகராறில் ஈடுபட்ட ரத்தினராஜ் தலைமறைவாகி விட்டார். தக்கலை போலீசார் முதலில் அடிதடி வழக்கு என்று பதிவு செய்திருந்தனர். மரிய சுரேஷ் பலியானதை தொடர்ந்து இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டது.

மரிய சுரேசுடன் ரத்தினராஜ் தகராறில் ஈடுபடும் காட்சிகள் ஆஸ்பத்திரியில் உள்ள கண்காணிப்பு காமிராவில் பதிவாகி இருந்தது. இதில் ரத்தினராஜுடன் மேலும் ஒருவர் இருப்பது காமிராவில் தெரிய வந்தது. அந்த நபர் யார்? என்பதை கண்டுபிடித்து இருவரையும் கைது செய்ய போலீசார் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

இதற்கிடையே மரிய சுரேஷ் கொலை செய்யப்பட்ட தகவல் அறிந்து 100-க்கும் மேற்பட்ட ஆண்களும், பெண்களும் தக்கலையில் திரண்டனர். அவர்கள் தக்கலை போலீஸ் நிலையம் முன்பு நடுரோட்டில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர்.

மரியசுரேசை கொன்ற கொலையாளியை கைது செய்ய வேண்டும், அதுவரை போராட்டத்தை தொடருவோம் என கூறி அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மறியல் நடந்த இடம் நாகர்கோவில் – திருவனந்தபுரம் தேசிய நெடுஞ்சாலை என்பதால் அந்த ரோட்டில் போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டது. சாலையின் இருபுறமும் வாகனங்கள் நீண்ட வரிசையில் காத்து நின்றன.

இதையடுத்து போலீஸ் இன்ஸ்பெக்டர் அருள் பிரகாஷ், மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். குற்றவாளியை உடனடியாக கைது செய்ய நடவடிக்கை எடுப்பதாக அவர் உறுதி அளித்தார். அதன்பேரில் உறவினர்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!