குமரி கொள்ளை வழக்குகளில் சிக்கிய ஈரான் நாட்டு கொள்ளையர்கள்


ஈரான் நாட்டு கொள்ளையர்கள் 2 பேர் நாகர்கோவிலில் கைது செய்யப்பட்டனர். சொகுசு காரில் வலம் வந்து பல இடங்களில் கைவரிசை காட்டியுள்ளனர்.

வெள்ளிச்சந்தை காட்டுவிளை பகுதியை சேர்ந்தவர் டேவிட். இவர் நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் எலக்ட்ரிக்கல் பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். நேற்று மாலை இவரது கடைக்கு வெளிமாநில பதிவெண் கொண்ட ஒரு சொகுசு கார் வந்தது. அந்த காரில் வெளிநாட்டை சேர்ந்த 2 பேர் வந்து இறங்கினர். அவர்கள் கடையில் இருந்த டேவிட்டிடம், இங்கு பஸ் நிறுத்தம் எங்குள்ளது என கேட்டனர்.

மேலும் அவர்கள் வைத்திருந்த 200 ரூபாய் நோட்டு ஒன்று மற்றும் மூன்று 100 ரூபாய் நோட்டுகளை டேவிட்டிடம் கொடுத்து புதிய 500 ரூபாய் நோட்டு தரும்படி கேட்டுள்ளனர். டேவிட்டும் கடையில் இருந்த ரூபாய் நோட்டு கட்டில் இருந்து ஒரு புதிய 500 ரூபாயை கொடுத்துள்ளார். அதே சமயத்தில், டேவிட்டிடம் நைசாக பேச்சு கொடுத்த அவர்கள் அவரது கவனத்தை திசை திருப்பி கடையில் இருந்த ரூ.10 ஆயிரத்தை திருடி விட்டு காரில் தப்பி சென்றனர்.

பின்னர் கடையில் உள்ள பணத்தை உரிமையாளர் சரிபார்த்தபோது, ரூ.10 ஆயிரம் குறைந்திருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தார். அதன்பிறகு தான் வெளிநாட்டை சேர்ந்தவர்கள் 2 பேரும் பணத்தை திருடி சென்றது அவருக்கு தெரியவந்தது. உடனே இதுகுறித்து அவர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தார். சம்பவ இடத்துக்கு விரைந்த போலீசார், அவர்களை தீவிரமாக தேடும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்களது சொகுசு கார் ஈத்தாமொழி நோக்கி சென்றதை கண்டனர். பின்னர் அந்த காரை மடக்கி பிடித்து 2 பேரிடமும் விசாரணை நடத்தினர். மேலும் அவர்களை நேசமணி நகர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரீநாத், நேரில் சென்று இருவரிடமும் தீவிர விசாரணை மேற்கொண்டார்.

விசாரணையில், ஈரான் நாட்டை சேர்ந்த சகோதரர்கள் ரிசா மற்றும் மிசேம் என்பதும் கடந்த நவம்பர் மாதம் ஈரானில் இருந்து மும்பைக்கு வந்ததும் தெரிய வந்தது. பின்னர் ஒரு சொகுசு காரை வாடகைக்கு எடுத்து கோவா, கேரளா உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் சுற்றிய இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன் தமிழ்நாட்டுக்கு வந்துள்ளனர்.

தமிழகத்தில் பல பகுதிகளுக்கு சென்றுவிட்டு கன்னியாகுமரிக்கு வந்த ரிசாமும், மிசேமும் சேர்ந்து மாவட்டத்தின் பல இடங்களில் கொள்ளை சம்பவங்களை அரங்கேற்றியதாக திடுக்கிடும் தகவல் வெளியானது.

இதன் தொடர்ச்சியாக நாகர்கோவில் ஆசாரிபள்ளத்தில் உள்ள எலக்ட்ரிக்கல் கடையில் பணத்தை திருடி உள்ளனர். இந்த சம்பவத்தை நிறைவேற்றிய சிறிது நேரத்தில் ஆசாரிபள்ளத்தை சேர்ந்த பிளம்பர் செல்வகுமார் என்பவரிடமும் நைசாக பேசி ரூ.10 ஆயிரம் திருடியது விசாரணையில் தெரிய வந்தது.

போலீசார் அவர்களிடம் நடத்திய சோதனையில், கட்டு கட்டாக ஈரான் நாட்டு பணம் இருந்தது. அதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் மாவட்டத்தில் முக்கிய கொள்ளை சம்பவங்களில் இவர்களுக்கு தொடர்பு உள்ளதா? எனவும் விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக வழக்குப்பதிவு செய்து இருவரையும் கைது செய்தனர்.

குமரியில் நடந்த கொள்ளை வழக்குகளில் ஈரான் நாட்டை சேர்ந்த 2 பேர் கைதான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!