அமெரிக்காவில் 7 லட்சம் இந்தியர்கள் வேலை இழக்கும் அபாயம்..!


அமெரிக்காவில் உள்ள கம்ப்யூட்டர் நிறுவனங்கள் மற்றும் அதை சார்ந்த தகவல் தொழில்நுட்ப நிறுவனங்கள் போன்றவற்றில் ஏராளமான இந்தியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

பேஸ்புக், கூகுள், மைக்ரோ சாப்ட், ஆப்பிள் என பல முன்னணி நிறுவனங்களும் இந்தியர்களையே வேலைக்கு அமர்த்தி உள்ளன.

இத்துடன் இந்திய சாப்ட்வேர் நிறுவனங்களான டி.சி.எஸ்., இன்போசிஸ், விப்ரோ, மகேந்திரா சத்யம், சி.டி.எஸ்., எச்.சி.எல். போன்ற நிறுவனங்களும் அமெரிக்காவில் ஏராளமான கிளை நிறுவனங்களை நடத்தி வருகின்றன. அவற்றிலும் இந்தியர்கள் பணியாற்றி வருகிறார்கள்.

இது தவிர, அமெரிக்காவின் நாசா ஆய்வு கூடம் மற்றும் பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களிலும் இந்தியர்கள் அதிக அளவில் பணியாற்றுகிறார்கள். மேலும் இங்கு பணியில் உள்ள டாக்டர்களில் பெரும்பாலானோர் இந்தியர்களாக இருக்கிறார்கள். இவ்வாறு பல லட்சம் இந்தியர்கள் அமெரிக்காவில் பல்வேறு துறைகளில் பணியாற்றி வருகின்றனர்.

வெளிநாட்டினர் அமெரிக்காவில் பணியாற்ற அனுமதி அளிப்பதற்கு எச்-1 பி விசா வழங்கப்பட்டு வருகிறது. இந்த விசா வைத்திருப்பவர்கள் 3 ஆண்டுகள் அமெரிக்காவில் தங்கி இருந்து பணிபுரியலாம். அவர்கள் பணி சிறப்பாக இருந்தால் மேலும் 3 ஆண்டு காலம் எச்-1 பி விசாவை நீடித்து கொள்ளலாம்.

இவ்வாறு ஒரு நபர் 6 ஆண்டு காலம் அமெரிக்காவில் தொடர்ந்து பணியாற்ற முடியும்.


அவ்வாறு 6 ஆண்டு பணிபுரிந்த பிறகு அங்கு நிரந்தரமாக தங்கி இருந்து பணியாற்றுவதற்கான கிரீன் கார்டை பெற்று கொள்ளலாம். 6 ஆண்டு பணியாற்றும் நபர் கிரீன் கார்டு பெறுவதற்கு முன்கூட்டியே விண்ணப்பிக்க வேண்டும். அவருக்கு கிரீன் கார்டு வழங்குவதற்கு ஒப்புதல் அளித்தால் அந்த நபர் 6 ஆண்டுக்கு பிறகும் அமெரிக்காவில் தங்கி இருந்து தொடர்ந்து பணி செய்யலாம்.

ஒவ்வொரு நாட்டுக்கும் எத்தனை கிரீன் கார்டு வழங்குவது என்ற நடைமுறைகளை அமெரிக்கா வைத்துள்ளது. அவ்வாறு ஒவ்வொரு நாட்டுக்காரர்களுக்கும் கிரீன் கார்டு வழங்கப்படும். இந்த கார்டை வழங்குவதாக ஒப்புதல் அளித்து விட்டால் அந்த நபர் காத்திருந்து கிரீன் கார்டை பெற்று கொள்ளலாம்.

ஆனால், இப்போது இந்த விசா நடைமுறையில் மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர்.

அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்டு டிரம்ப் போட்டியிடும் போதே வெளிநாட்டினருக்கு அமெரிக்காவில் வேலை வழங்குவதை கட்டுப்படுத்த போவதாக அறிவித்திருந்தார்.

அவர் அதிபர் ஆனதும் இதை அமல்படுத்தும் வகையில் படிப்படியாக புதிய திட்டங்களை அறிவித்து வருகிறார். அதன்படிதான் விசா நடைமுறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டுள்ளது.

இப்போது கொண்டு வந்துள்ள மாற்றத்தின்படி எச்-1 பி விசா பெற்ற நபர் 6 ஆண்டுகளுக்கு பிறகு கிரீன் கார்டுக்கு விண்ணப்பித்து விட்டால் அந்த கார்டு கிடைக்கும் வரை அமெரிக்காவில் தங்கி இருக்க முடியாது.

6 ஆண்டுகள் முடிந்ததுமே அவர் நாட்டை விட்டு வெளியேறி விட வேண்டும். அவருக்கு ஒவ்வொரு நாட்டுக்கும் கிடைக்கும் ஒதுக்கீட்டு முறையில் கிரீன் கார்டு கிடைத்தால் அவர் மீண்டும் அமெரிக்காவுக்கு வந்து பணியை தொடரலாம்.

இவ்வாறு விசா நடைமுறையில் புதிய மாற்றம் கொண்டு வந்திருப்பதால் எச்-1 பி விசா பெற்று இனி 6 ஆண்டு பணிபுரிந்தவர்கள் உடனடியாக நாடு திரும்ப வேண்டிய நிலை உள்ளது.


அது மட்டும் அல்ல, எச்-1 பி விசா பெற்ற ஆணோ, பெண்ணோ தங்கள் கணவர் அல்லது மனைவியை அமெரிக்காவுக்கு அழைத்து வரலாம். இதற்கு எச்-4 இ.ஏ.டி. என்ற விசா வழங்கப்பட்டது.

இந்த விசாவைத்திருந்தால் அவர்கள் அமெரிக்காவில் பணியாற்றி கொள்ளலாம். இப்படித்தான் இந்தியாவில் இருந்து செல்லும் கணவன்- மனைவி இருவரும் அங்கு பணியாற்றுகிறார்கள்.

புதிய விசா நடைமுறைப்படி எச்-4 இ.ஏ.டி. விசா வழங்கியதை வாபஸ் பெறும்படி உத்தரவிடப்பட்டுள்ளது. எனவே, எச்-1 பி. விசா பெற்றவரின் கணவன் அல்லது மனைவி இனி அமெரிக்காவில் பணியாற்ற முடியாது.

இந்த நடைமுறைகளால் எச்-1 பி. விசா பெற்று 6 ஆண்டுகள் பணி முடித்தவர்களும், எச்-4 இ.ஏ.டி. விசா வைத்திருப்பவர்களும் அமெரிக்காவை விட்டு வெளியேற வேண்டும்.

இந்த விசாக்களை பெற்று இந்தியர்கள்தான் அதிக அளவில் அங்கு பணியாற்றி வருகிறார்கள். அமெரிக்கா ஒவ்வொரு ஆண்டும் 85 ஆயிரம் பேருக்கு எச்-1 பி. விசா வழங்கி வருகிறது. இதில். பாதி பேர் இந்தியர்கள்.

இவ்வாறு கடந்த 6 ஆண்டில் மட்டும் 2½ லட்சம் பேர் எச்-1 பி. விசா பெற்று அமெரிக்காவில் பணியாற்றி வருகிறார்கள். அவர்கள் அனைவரும் வெளியேற வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இத்துடன் எச்-1 பி. விசா பெற்று 6 ஆண்டு பணிபுரிந்து கிரீன் கார்டுக்காக பல லட்சம் பேர் காத்து இருக்கிறார்கள். அவர்களும் வெளியேற வேண்டி உள்ளது.

மேலும் எச்-4 இ.ஏ.டி. விசா பெற்ற கணவன் அல்லது மனைவியும் பல லட்சம் பேர் இருக்கிறார்கள். அவர்களும் வெளியேற வேண்டும். இவ்வாறு 5 லட்சத்தில் இருந்து 7 லட்சம் இந்தியர் வரை வெளியேற வேண்டி இருக்கிறது.


அவர்கள் வெளியேறுவதால் அமெரிக்க வேலையை இழக்க வேண்டும். அவர்கள் பணிபுரியும் நிறுவனம் இந்தியாவில் இருந்தால் வேலை வாய்ப்பு வழங்கலாம். இல்லை என்றால் எந்த வேலையும் இல்லாமல் பரிதாபமாக திரும்பும் நிலை உருவாகும்.

இது, இந்திய கம்ப்யூட்டர் மற்றும் தகவல் தொழில்நுட்பதுறைக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தும் என்று எதிர் பார்க்கப்படுகிறது.

அதே நேரத்தில் அமெரிக்காவிலும் கூட இது பாதிப்பை ஏற்படுத்தும் என்று தொழில்நுட்ப வல்லுனர்கள் கூறுகிறார்கள். கூகுள், மைக்ரோ சாப்ட், பேஸ்புக், டுவிட்டர், வாட்ஸ்-அப் போன்ற நிறுவனங்கள் எல்லாம் அமெரிக்காவில் இருந்தபடிதான் உலக அளவில் சேவை செய்து வருகிறது.

இந்த நிறுவனங்களில் இந்தியர்கள், சீனர்கள் மற்றும் பல்வேறு வெளி நாட்டினர் முக்கிய நபர்களாக இருந்து பணியாற்றுகிறார்கள். அவர்கள் வெளியேறி விட்டால் அமெரிக்காவில் அந்த நிறுவனங்களை செயல்படுத்துவதற்கு போதிய தொழில்நுட்பம் தெரிந்த ஆட்கள் இருக்காது.

அமெரிக்கர்களை அந்த பதவியில் அமர்த்துவதாக இருந்தால் அவர்கள் எல்லோருமே சிறந்த தொழில்நுட்பம் தெரிந்தவர்கள் என்று சொல்ல முடியாது. மேலும் அவர்கள் இந்தியர்கள், சீனர்கள் போல் நேரம் காலம் பார்க்காமல் வேலை செய்ய மாட்டார்கள்.

எனவே, அந்த நிறுவனங்கள் செயல்படுவதற்கு சிரமம் ஏற்படும். இதனால் அந்த நிறுவனங்கள் அங்கிருந்து வெளியேறி வேறு நாடுகளில் இருந்து செயல்பட ஆரம்பிக்கலாம். இது அமெரிக்காவுக்கு பாதிப்பை ஏற்படுத்தும்.

ஏற்கனவே அமெரிக் காவில் இருந்து வெளியேறிய சீனர்கள் இப்போது சீனாவில் இருந்தபடி இதுபோன்ற நிறுவனங்களை தொடங்கி உலக அளவில் நடத்தி கொண்டு இருக்கிறார்கள். இதேபோல் அமெரிக்காவில் இருந்த வெளியேறுபவர்கள் அவர்களது நாட்டில் இருந்து இதுபோன்ற பன்னாட்டு சேவை நிறுவனங்களை தொடங்கி விட்டால் அது அமெரிக்காவுக்கு தான் கடும் போட்டியாக அமைந்து விடும்.

எனவே, வெளிநாட்டினரை அமெரிக்கா வெளியேற்றும் அதே நேரத்தில் அது அமெரிக்காவுக்கே ஆபத்தாகி விடும் என்று நிபுணர்கள் எச்சரித்துள்ளனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!