கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி மகனை கொன்ற தாய்


வளர்ப்பு மகனை தாயே கள்ளக்காதலனுடன் சேர்ந்து கூலிப்படையை ஏவி கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

ஆவடி அடுத்த கன்னிகாபுரம் ரே‌ஷன் கடை தெருவில் வசித்து வருபவர் அஞ்சலி. இவரது கணவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். இவர்களுக்கு 3 மகள்கள் உள்ளனர். அஞ்சலியின் வளர்ப்பு மகனாக சதீஷ் (வயது 19). இருந்தார்.

இந்த நிலையில் கடந்த 2-ந் தேதி திருநின்றவூர் வத்சலாபுரம் 3-வது தெருவில் குடியிருப்புகளுக்கு மத்தியில் உள்ள பாழடைந்த வீட்டில் சதீஷ் வெட்டி கொலை செய்யப்பட்டு கிடந்தார். இதுகுறித்து திருநின்றவூர் போலீசார் விசாரணை நடத்தினர்.

அப்போது சதீசை அவரது வளர்ப்பு தாயான அஞ்சலியே கள்ளக்காதலனான ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த காமராஜூடன் சேர்ந்து தீர்த்துக்கட்டி இருப்பது விசாரணையில் தெரியவந்தது. இதற்காக அவர்கள் ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் பேரம் பேசி கூலிப்படையை ஏவி சதீசை தீர்த்துக்கட்டி உள்ளனர்.

இதையடுத்து வளர்ப்பு தாய் அஞ்சலி, கள்ளக் காதலன் காமராஜ், ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த சுரேஷ், சூலூர்பேட்டை ஒட்டர்பாளையம் பகுதியை சேர்ந்த விக்னேஷ் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

கொலை குறித்து கைதான காமராஜ் போலீசில் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறி இருப்பதாவது:-

அஞ்சலியின் கணவர் இறந்து பல ஆண்டுகள் ஆகிறது. 3 மகள்கள் உள்ளனர். அவர்களுக்கு ஆண் குழந்தை இல்லாததால் சதீஷை தத்தெடுத்து வளர்த்தனர். எனக்கும் அஞ்சலிக்கும் கள்ளத்தொடர்பு இருந்து வந்தது.

வளர்ப்பு மகனாக இருப்பதை அறிந்ததும் சதீசின் நடவடிக்கையில் மாற்றம் ஏற்பட்டது. நாளடைவில் அஞ்சலியையும் அவருடைய மகள்களையும் பல விதங்களில் மிரட்டி தொல்லை கொடுத்தார்.

மேலும் என்னையும் அஞ்சலி வீட்டுக்கு வரக்கூடாது என்று மிரட்டினான். அப்படி வந்தால் கியாசை திறந்து விட்டு அனைவரையும் கொளுத்தி விடுவேன் என்று அஞ்சலியிடம் கூறி இருக்கிறான்.

இதனால் தொந்தரவாக இருக்கும் சதீஷை கூலிப் படை மூலம் தீர்த்து கட்டி விட வேண்டும் என்று நானும், அஞ்சலியும் பேசி முடிவு செய்தோம்.

இதுபற்றி ஆவடி வீட்டு வசதி வாரிய குடியிருப்பை சேர்ந்த சுரேஷ் , முத்துகுமார் ஆகியோரிடம் கூறினோம். அவர்கள் சதீஷை கொலை செய்ய ரூ. 1 லட்சத்து 60 ஆயிரம் பணம் கேட்டனர். முன் பணமாக ரூ. 25 ஆயிரம் கொடுத்தோம்.

திட்டப்படி சம்பவத்தன்று சதீசை மதுகுடிக்க செல்லலாம் என்று கூறி சுரேஷ், முத்துக்குமார் மற்றும் சூலூர் பேட்டை ஒட்டர்பாளையத்தை சேர்ந்த விக்னேஷ் ஆகியோர் அழைத்து சென்றனர். அங்கு சதீசை வெட்டி கொலை செய்தனர்.

பின்னர் சதீஷ் ஓட்டி வந்த மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு 3 பேரும் கிருஷ்ணா கால்வாயில் ரத்தக்கறைகளை கழுவி விட்டு தப்பிச்சென்று விட்டனர்.

இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

இந்த வழக்கில் முக்கிய குற்றவாளியான முத்துக்குமார் தலைமறைவாகி விட்டார். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். கைதான அஞ்சலி உள்பட 4 பேரும் திருவள்ளூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு புழல் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!