அரசு பெண் ஊழியர் சரமாரி வெட்டிக்கொலை – பாளையங்கோட்டை அருகே பயங்கரம்


பாளையங்கோட்டை அருகே அரசு பெண் ஊழியர் சரமாரி வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய கணவரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

பாளையங்கோட்டை அருகே உள்ள இட்டேரி கிராமம் முத்தமிழ் தெருவை சேர்ந்தவர் அந்தோணி. இவருடைய மகள் வித்யா (வயது 27). இவர் பாளையங்கோட்டை சாந்திநகரில் உள்ள தேசிய மாணவர் படை அலுவலகத்தில் ஊழியராக வேலை செய்து வந்தார். இவருடைய முதல் கணவர் விபத்தில் இறந்து விட்டதை தொடர்ந்து, 2-வதாக நாங்குநேரி அருகே உள்ள முதலைகுளத்தை சேர்ந்த நயினார் என்ற ஆறுமுகநயினார் (29) என்பவருக்கு திருமணம் செய்து வைக்கப்பட்டார். நயினார் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இந்த தம்பதிக்கு கடந்த 5 மாதத்துக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது. இதையொட்டி வித்யா, இட்டேரி கிராமத்தில் உள்ள பெற்றோர் வீட்டில் இருந்து தன்னுடைய குழந்தையை பராமரித்து வந்தார்.

இந்த நிலையில் நயினார் தன்னுடைய குழந்தையை எடுத்துக்கொண்டு மூலைக்கரைப்பட்டியில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். அங்கு உறவுக்கார பெண்ணிடம் அந்த குழந்தையை கொடுத்து விட்டு சென்று விட்டார்.

அப்போது குழந்தையின் சட்டையில் ரத்தக்கறை படிந்திருந்தது. இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அந்த பெண் உடனடியாக இட்டேரிக்கு புறப்பட்டு வந்தார். அங்கு அந்தோணியின் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, வித்யா சரமாரியாக வெட்டிக் கொலை செய்யப்பட்டு கிடந்தார். வித்யாவை கொலை செய்துவிட்டு குழந்தையை மூலைக்கரைப்பட்டிக்கு நயினார் எடுத்து வந்தது அப்போதுதான் அவருக்கு தெரியவந்தது.

இதுகுறித்து தகவல் அறிந்த முன்னீர்பள்ளம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சீதாலட்சுமி தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். அவர்கள் வித்யா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து போலீசார் வித்யாவின் உறவினர்களிடம் விசாரித்தபோது அவர்கள் கூறுகையில், “வித்யாவை முதலைகுளத்துக்கு குடும்பம் நடத்த வருமாறு நயினார் அழைத்தார். அங்கு அவருக்கு வீடு இல்லாததால், பாளையங்கோட்டையில் வீடு எடுத்து வசிக்கலாம் என வித்யா கூறினார். ஆனால் இதை ஏற்றுக் கொள்ளாமல் வித்யாவின் வேலையை ராஜினாமா செய்யுமாறு கூறி அடிக்கடி தகராறு செய்து வந்தார்” என்றனர். எனவே, இந்த பிரச்சினையில் வித்யா கொலை செய்யப்பட்டு உள்ளாரா? அல்லது வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது.

இதுதொடர்பாக முன்னீர்பள்ளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தப்பி ஓடிய நயினாரை வலைவீசி தேடி வருகின்றனர்.

வித்யா அரசு பெண் ஊழியர் என்பதால் அவருக்கு பேறுகால விடுப்பு 9 மாதம் வழங்கப்பட்டது. இதில் பிரசவத்துக்கு பிறகு 5 மாத காலம் முடிவடைந்து விட்டதால் அடுத்த மாதம் (மார்ச்) வேலைக்கு செல்ல முடிவு செய்திருந்தார். மேலும் தன்னுடைய குழந்தைக்கு கணவருடன் சேர்ந்து பெயர் சூட்ட வேண்டும் என கருதி இதுவரை பெயர் சூட்டாமலேயே இருந்து உள்ளார். இந்த நிலையில் அவர் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!