பெற்ற தாயை கொன்று விட்டு காதலனுடன் அந்தமான் டூர்! அதிர வைத்த இளம்பெண்!


பெற்ற தாயை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு, தம்பியை தாக்கி விட்டு, ஆண் நண்பருடன் சுற்றுலாவுக்காக அந்தமானுக்கு தப்பியோடிய பெண் என்ஜினியர் கைதுசெய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பெங்களூர் கே.ஆர். புரம் அருகே வசித்து வருபவர் மென் பொறியாளர் அம்ருதா சந்திரசேகர் (33). ஐடி நிறுவனம் ஒன்றில் பணிபுரிந்து வரும் இவர், தந்தை இறந்துவிட தாய் நிர்மலா (52) மற்றும் ஐ.டி. ஊழியரான தம்பி ஹரிஷ் (30) ஆகியோருடன் வசித்து வந்துள்ளார்.

ஹைதராபாத்துக்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளதால், அங்கு செல்லப் போவதாக அம்ருதா வீட்டில் தெரிவித்து வந்துள்ளார். இந்நிலையில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அதிகாலை வெறித்தனமாக பேசுவது போன்று ஏதோ சத்தம் அம்ருதாவின் அறையில் கேட்டுள்ளது.

இதையடுத்து கண்விழித்துப் பார்த்த தம்பி ஹரீஷ், தனது அக்கா அறைக்கு சென்று, அங்கு அலமாரியில் இருந்து துணிகளை எடுத்து வைத்துக் கொண்டிருந்த அம்ருதாவிடம், என்னவென்று கேட்டதுடன், ஏதாவது உதவி செய்யட்டுமா என்று கேட்டுள்ளார். ஆனால் உதவி எதும் வேண்டாம் என்று அம்ருதா கூறவே, பின்னர் தனது அறைக்குப் போய் தம்பி ஹரீஷ் படுத்துக் கொண்டார். சிறிது நேரம் கழித்து தம்பியின் அறைக்கு வந்த அம்ருதா, அவரை கழுத்தில் முதலில் கத்தியால் குத்தி, கம்பியால் தாக்கியுள்ளார்.

இதில் மயங்கி விழுந்த தம்பி இறந்து விட்டதாக நினைத்த அம்ருதா, பின்னர் தாயாரை கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு தப்பியோடி விட்டார். பின்னர் படுகாயங்களுடன் கண் விழித்து பார்த்த தம்பி ஹரீஷ், உறவினர்கள் உதவியுடன் போலீசாரை அணுகியுள்ளார்.

இதையடுத்து சிசிடிவி காட்சிகள் உதவியுடன் அவர்கள் நடத்திய விசாரணையில், வீட்டிலிருந்து வெளியே சென்ற அம்ருதா, சிறிது தூரத்தில் பைக்கில் காத்திருந்த ஆண் நண்பர் ஸ்ரீதர் ராவுடன், கெம்பேகௌவுடா விமான நிலையத்தில் இருந்து, காலை 6.30 மணிக்கு அந்தமானின் போர்ட்பிளேருக்கு விமானத்தில் 5 நாள் விடுமுறைக்கு சென்றது தெரிய வந்தது.

இதையடுத்து அந்தமானுக்கு சென்ற பெங்களூர் போலீசார், அங்கு ஹோட்டலில் தங்கியிருந்த அம்ருதாவையும், ஆண் நண்பரையும் நேற்று கைது செய்து அங்குள்ள நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தியுள்ளனர். அவர்கள் இருவரும் பெங்களூர் அழைத்து அழைவரப்பட்ட பின்னரே முழு விபரங்கள் தெரியவரும் என மகாதேவபுரம் துணை ஆணையர் அனுசேத் கூறியுள்ளார்.

ஏனெனில், முதல் கட்ட விசாரணையில் அம்ருதா பகிர்ந்த தகவல்களும், அவரது தம்பி கூறும் காரணங்களும் முன்னுக்குப் பின் முரணாக இருப்பதாக போலீசார் கூறியுள்ளனர். மேலும் புற்றுநோயால் உயிரிழந்த தந்தையின் மருத்துவ செலவுக்கு கடன் கொடுத்தவர்கள் நெருக்குவதால், தாயையும், சகோதரரையும் கொலை செய்து தானும் தற்கொலை செய்ய அம்ருதா திட்டமிட்டதாக கூறப்படுகிறது.

அதற்கு முன்பாக தனது ஆண் நண்பருடன் சுற்றுலா சென்று வந்து விடலாம் என்று திட்டமிட்டதாக போலீசார் கூறுகின்றனர். அம்ருதா காதலுக்கு வீட்டில் எதிர்ப்பு தெரிவித்திருக்கலாம் அதனால் அவர் திட்டமிட்டு இக்கொலையை நிகழ்த்திருக்கலாம் எனவும் போலீசார் சந்தேகிக்கின்றனர். எனினும் அந்தமானில் கைது செய்யப்பட்ட இருவரும் பெங்களூரு அழைத்துவரப்பட்டு விசாரணை நடத்திய பின்னரே அனைத்தும் தெரியவரும் என போலீசார் தெரிவிக்கின்றனர்.-Source: newstm

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!