மேட்டுப்பாளையத்தில் ரவுடி சரமாரியாக வெட்டி கொலை..!


மேட்டுப்பாளையத்தில் ரவுடியை சரமாரியாக வெட்டி கொன்று உடலை மர்ம நபர்கள் தீயணைப்பு நிலைய வளாகத்தில் வீசி சென்றனர்.

புதுவை கோரிமேடு தீயணைப்பு நிலைய வளாகத்தில் இரவு நேரங்களில் ரவுடிகள் மது அருந்துவது வழக்கம். காலையில் அந்த காலி மதுபாட்டில்களை குப்பை பொறுக்குபவர்கள் எடுத்து செல்வார்கள்.

அதுபோல் இன்று காலை குப்பை பொறுக்கும் ஒரு பெண் தீயணைப்பு நிலைய வளாகத்தில் காலி மது பாட்டில்களை பொறுக்க சென்றார்.

அப்போது தீயணைப்பு வளாகத்தில் ஒரு வாலிபர் கொலை செய்யப்பட்டு உடல் கிடப்பதை கண்டு திடுக்கிட்டார்.

இதுபற்றி அந்த பெண் அங்குள்ள தீயணைப்பு அதிகாரிகளிடம் தெரிவித்தார். இதையடுத்து தீயணைப்பு அதிகாரிகள் இதுகுறித்து கோரிமேடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து கோரிமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜ், சப்-இன்ஸ்பெக்டர்கள் இனியன், திருமுருகன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர்.

மேலும் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அகன்ஷியா யாதவ், சூப்பிரண்டு சுபம் சந்திரகோஷ் ஆகியோர் சம்பவ இடத்தை பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

விசாரணையில் கொலை செய்யப்பட்டு கிடந்தவர் குறித்து பரபரப்பு தகவல் கிடைத்தது. அதன் விவரம் வருமாறு:-

மேட்டுப்பாளையம் ராம்நகர் விரிவாக்கம் இந்திரா நகரை சேர்ந்த தங்கராஜ் மகன் ஜெயபால் (வயது 24) என்பது தெரியவந்தது. ரவுடியான இவர் மீது அடிதடி மற்றும் கொலை முயற்சி வழக்கு உள்ளது.

இவரது தந்தை இறந்து விட்ட நிலையில் தாய் லட்சுமி அங்குள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவரது அண்ணன் ஐதராபாத்தில் வேலை செய்து வருகிறார்.

பெயிண்டர் வேலை செய்து வந்த ஜெயபால் நேற்று இரவு வேலை முடிந்து வீட்டுக்கு வந்தார். பின்னர் சாப்பிட்டு விட்டு வீட்டு வராண்டாவில் தூங்கினார். நள்ளிரவு 11 மணியளவில் மோட்டார் சைக்கிளில் வந்த மர்மநபர்கள் வீட்டுக்குள் புகுந்து தூங்கிக்கொண்டு இருந்த ஜெயபாலின் வாயை பொத்தி தரதரவென்று இழுத்து சென்றுள்ளனர்.

பின்னர் வீட்டின் எதிரே உள்ள காலி மனையில் வைத்து ஜெயபாலை சரமாரியாக அரிவாளால் வெட்டி உள்ளனர். உயிர் பிழைத்து கொள்ளக்கூடாது என்ற எண்ணத்தில் முகம் மற்றும் தலையை குறி வைத்து அரிவாளால் வெட்டி முகத்தை சிதைத்துள்ளனர்.

பின்னர் ஜெயபால் இறந்து போனதை உறுதி செய்த அந்த கும்பல் ஜெயபாலின் உடலை ஒரு துணியில் கட்டி மோட்டார் சைக்கிளில் கொண்டு சென்று கோரிமேடு தீயணைப்பு நிலைய வளாகத்தில் வீசி சென்றுள்ளனர். மேற்கண்ட தகவல்கள் போலீஸ் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து கொலை செய்யப்பட்ட இடத்தில் போலீஸ் சூப்பிரண்டு ஜிந்தா கோதண்டராமன் மற்றும் மேட்டுப்பாளையம் போலீசார் பார்வையிட்டு விசாரணை நடத்தினர்.

இதற்கிடையே கொலை செய்யப்பட்ட இடம் மேட்டுப்பாளையம் போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியிலும், உடல் வீசப்பட்டது கோரிமேடு போலீஸ் நிலையத்துக்குட்பட்ட பகுதியாகவும் உள்ளதால் யார் வழக்கு பதிவு செய்வது என்பதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது. பின்னர் மேட்டுப்பாளையம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொலையாளிகளை தேடி வருகிறார்கள்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!