கர்ப்பிணிப் பெண்களின் ஹீமோகுளோபின் அளவு ஏன் குறைகின்றது..?


கர்ப்ப காலத்தில் பெண்களுக்கு, மிகப் பெரிய வகையில் ஹீமோகுளோபின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படக் கூடும். இதற்கான காரணங்களை அறிந்து கொள்ளலாம்.

ஹீமோகுளோபின் தேவையான அளவிலிருந்து சற்று குறைந்து இருந்தால், அதில் பெரிதாக எந்த உபாதைகளும் உடலுக்கு ஏற்படாது. எனினும், கர்ப்பிணிப் பெண்களுக்கு, கர்ப்ப காலத்தில் மிகப் பெரிய வகையில் ஹீமோகுளோபின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படக் கூடும். இந்த வகையில், அதிக அளவு உடலில் இரும்புச் சத்து குறைந்து அல்லது உயிர்ச்சத்து அளவு குறைந்தால், இரத்த சோகை அதிக அளவு ஏற்படக் கூடும்.

கர்ப்ப காலத்தில் பொதுவாக ஹீமோகுளோபின் அளவு குறைந்து விடும். இதற்கு முக்கிய காரணம், கர்ப்பிணிப் பெண்ணின் உடலில் 50% இரத்தத்தின் உற்பத்தி அளவு குழந்தையின் வளர்ச்சிக்காக அதிகரிக்கின்றது. இதனால் ஹீமோகுளோபின் அளவு அதிகம் தேவைப்படுகின்றது. ஆனால் அந்த உற்பத்திக்குத் தேவையான சத்துக்கள் கிடைக்காத நிலையில் ஹீமோகுளோபின் அளவு குறையத் தொடங்கி விடுகின்றது.

இந்த நிலையைக் கவனிக்காமல் விட்டு விட்டால், நாளடைவில் பல விளைவுகளைக் கர்ப்பிணிப் பெண்ணுக்கும், குழந்தைக்கும் ஏற்படுத்தி விடக் கூடும். அதிலும் ஹீமோகுளோபின் 6g/dl அளவிற்கும் கீழ் குறைந்து விட்டால், அந்த பெண்ணுக்கு ‘ஆன்ஜினா’ ஏற்பட அதிக வாய்ப்பு உண்டாகும். இதனால் அந்த பெண்ணுக்கு மார்பில் அதிக வலி ஏற்படும். இது மெதுவாக கைகள், தோள்கள் மற்றும் கழுத்து பகுதிக்குப் பரவி போதுமான இரத்த ஓட்டம் இருதயத்திற்குக் கிடைக்காமல் செய்து விடும்.

உடலில் கர்ப்பிணிப் பெண்களுக்கு ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கப் பல காரணங்கள் உள்ளன. அவற்றில் சில இங்கே:

கர்ப்பத்திற்கு முன் ஏற்பட்ட கடைசி மாதவிடாய் காலத்தில் அதிக இரத்தப் போக்கு ஏற்படுவதால் ஹீமோகுளோபின் அளவு குறையும்.

உணவுக் கட்டுப்பாட்டிலிருந்தால், போதுமான இரும்புச் சத்து கிடைக்காமல் ஹீமோகுளோபின் அளவு குறையும்.

கர்ப்பம் அடையும் முன் இரத்தம் தானம் செய்திருந்தால் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்க வாய்ப்பு உள்ளது.

உடலில் இரும்புச் சத்து சரியாகக் கிடைக்கப் பெறாமல் போனால் இது நேரலாம்.

முதல் குழந்தை பிறந்த உடனேயே போதிய இடைவெளி இன்றி, அடுத்த குழந்தையைக் கருவுறும் சமயத்தில் ஹீமோகுளோபின் அளவு குறைய வாய்ப்பு உள்ளது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!