ஆயிரம் படுக்கைகள்… 9 நாட்களில் கட்டி முடிக்கப்பட்ட சீன மருத்துவமனை


கொரோனா வைரஸ் பிடியில் உள்ள வுகான் நகரில் ஆயிரம் படுக்கைகள் கொண்ட சிறப்பு மருத்துவமனை 9 நாட்களில் கட்டி முடிக்கப்பட்டுள்ளது. இங்கு இன்று முதல் நோயாளிகள் அனுமதிக்கப்படுகின்றனர்.

உலக சுகாதார அமைப்பானது கொரோனா வைரசின் தாக்கம் அதிகரித்து வருவதை அடுத்து உலக அவசரநிலை அறிவிப்பை வெளியிட்டது. இதனையடுத்து நோயைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சீனாவின் வுகான் நகரில் கட்டப்பட்ட இரண்டு புதிய மருத்துவமனைகளில் 269,000 சதுர அடி கொண்ட கட்டிடத்தில் ஒன்று தற்போது செயல்பாட்டுக்கு தயார் நிலையில் உள்ளது. சார்ஸ் வைரஸை சமாளிக்க பீஜிங்கில் 2003 இல் கட்டப்பட்ட மருத்துவமனையை அடிப்படையாகக் கொண்டு தற்போது இந்த புதிய கட்டிடங்களுக்கான வடிவமைப்பை மேற்கொண்டுள்ளனர்.சுமார் 7 ஆயிரம் தொழிலாளர்கள் அரும்பாடு பட்டு இந்த மருத்துவமனையை கட்டி முடித்துள்ளனர்.

கட்டுமானத்தை விரைவுபடுத்துவதற்காக நாடு முழுவதிலுமிருந்து பொறியாளர்கள் அழைத்து வரப்பட்டதாக கூறப்படுகிறது.மட்டுமின்றி இந்த மருத்துவமனையானது மற்ற மருத்துவமனைகளில் இருந்து பொருட்களை வரவழைத்துக் கொள்ளவும் அல்லது தொழிற்சாலைகளில் இருந்து ஆர்டர் செய்யவும் அனுமதிக்கப்படும்.

இன்று முதல் இந்த மருத்துவமனையில் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெறுவார்கள் என சீன அரசு அறிவித்துள்ளது.

இந்த மருத்துவமனையானது சீன இராணுவத்தின் கட்டுப்பாட்டுக்கு வழங்கப்பட்டதாக கூறப்படுகிறது. சுமார் 1,400 இராணுவ மருத்துவர்கள் மக்கள் விடுதலை இராணுவத்திலிருந்து புதிய மருத்துவமனைக்கு அழைத்து வரப்பட்டுள்ளனர். இங்கு பணியாற்றவிருக்கும் பெரும்பாலான மருத்துவர்கள், கடந்த 2002 மற்றும் 2003 ஆம் ஆண்டுகளில் சீனாவில் 650 பொதுமக்களை பலிகொண்ட சார்ஸ் வைரஸ் காலகட்டத்தில் பணியாற்றியவர்கள் என கூறப்படுகிறது.

ஆயிரம் படுக்கைகளுடன் 419 வார்டுகளுடன் கூடிய இந்த அதிநவீன மருத்துவமனை தயார் நிலையில் உள்ளது. 30 அவசர சிகிச்சை பிரிவுகளும் இங்கு உள்ளன.–Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!