ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் சீனாவைச் சேர்ந்த 8 பேர் அனுமதி


கொரோனா வைரஸ் தாக்குதல் இருக்கலாம் என்ற சந்தேகத்தில் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கூடுதல் சிறப்பு வார்டு திறக்கப்பட்டுள்ளது. அங்கு சீனாவைச் சேர்ந்த 8 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

சீனாவில் தொடங்கிய கொரோனா வைரஸ் தாக்குதல் மற்ற நாடுகளுக்கும் பரவி வருகிறது. இதற்காக விமான நிலையங்களில் சீனாவில் இருந்துவரும் பயணிகளுக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்படுகிறது. சென்னை விமான நிலையத்திலும் தீவிரமாக கண்காணிக்கப்படுகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பு சந்தேகம் உள்ளவர்கள் அரசு ஆஸ்பத்திரிகளில் உள்ள சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.

சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா வைரஸ் பாதிப்பு சந்தேகம் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக ஏற்கனவே ஒரு சிறப்பு வார்டு அமைக்கப்பட்டு இருந்தது. இந்த வார்டில் 6 படுக்கை வசதிகளுடன், 10 டாக்டர்கள், 20 செவிலியர்கள் உள்ளனர்.

சீனாவில் இருந்து நேற்று சென்னைக்கு விமானத்தில் வந்த சீனாவைச் சேர்ந்த 8 பேருக்கு காய்ச்சல் அறிகுறி இருந்தது. அவர்களுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தில் தனி ஆம்புலன்ஸ் மூலம் ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து வரப்பட்டனர். அவர்களுக்கு சிறப்பு மருத்துவ குழுவினர் மூலம் தீவிர பரிசோதனை நடைபெற்று வருகிறது.


ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் அவர்களுடன், சேலையூரை சேர்ந்த பெண், திருவண்ணாமலை மாவட்ட வாலிபர் என மொத்தம் 10 பேர் கொரோனா வைரஸ் பாதிப்பு சந்தேகத்தில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களின் ரத்த மாதிரி கிண்டி கிங் ஆராய்ச்சி மையத்துக்கு பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளது.

ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் உள்ள சிறப்பு வார்டில் 6 பேருக்கு மட்டுமே சிகிச்சை அளிக்க முடியும் என்பதால் எஞ்சியவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக கூடுதல் வார்டு ஏற்பாடு செய்யப்பட்டது. இந்த கூடுதல் வார்டிலும் 6 படுக்கை வசதிகள் உள்ளன. இதில் கொரோனா வைரஸ் பாதிப்பு சந்தேகம் உள்ளவர்களுக்கு சிகிச்சை அளிக்க தேவையான மருந்துகள், முகக்கவசங்கள் அனைத்தும் தயாராக உள்ளன.

10 பேர் அனுமதிக்கப்பட்டுள்ளதால் ஆஸ்பத்திரியில் உள்ள டாக்டர்கள், நர்சுகள், ஊழியர்கள், பாதுகாப்பு பணியில் ஈடுபடும் போலீசார் உள்பட அனைவரும் முகக்கவசம் அணிந்தே பணியில் ஈடுபடுகின்றனர்.

மதுரை கொட்டாம்பட்டியை சேர்ந்த அருண் (வயது 27) என்பவர் சிங்கப்பூரில் இருந்து விமானம் மூலம் நேற்று காலை திருச்சி வந்தார். கடுமையான காய்ச்சலுடன் இருந்த அவரை திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

அவருடைய ரத்தம், சளி மாதிரியை விரைவில் புனேவில் உள்ள ஆய்வுக்கூடத்துக்கு அனுப்ப உள்ளனர். அதன் முடிவு வந்த பின்னர் தான் கொரோனா வைரஸ் பாதிப்பா? என்று தெரியவரும் என மருத்துவமனை டீன் வினிதா தெரிவித்தார்.

இதேபோல சீனாவில் இருந்து சில தினங்களுக்குமுன்பு வந்த ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை பகுதியை சேர்ந்த மாதவன் என்பவர் காய்ச்சல் காரணமாக ராமநாதபுரம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இல்லை என்று கூறப்படுகிறது. என்றாலும் அவரை டாக்டர்கள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!