வெடிகுண்டு வீசி அமைச்சரின் ஆதரவாளர் வெட்டிக் கொலை – புதுவை அருகே பயங்கரம்..!


புதுவை அருகே வெடிகுண்டு வீசி அமைச்சரின் ஆதரவாளர் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இது குறித்து பரபரப்பு தகவல்கள் கிடைத்துள்ளன.

புதுவை கிருமாம்பாக்கம் அருகே உள்ள பிள்ளையார்குப்பம் அங்காளம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் வீரப்பன். காங்கிரஸ் பிரமுகரான இவர் முன்னாள் கவுன்சிலர். அமைச்சர் கந்தசாமியின் தீவிர ஆதரவாளர். தேர்தல், கட்சியின் முக்கியமான பணிகளில் அவருக்கு பக்கபலமாக இருந்தார்.

இதுதொடர்பாக ஏற்பட்ட முன்விரோதத்தில் எதிர் தரப்பினரால் கடந்த 2017-ம் ஆண்டு வீரப்பன் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக பிள்ளையார்குப்பம் பகுதியை சேர்ந்த அமுதன், சூர்யா, சுபாஷ், புகழ் என்ற புகழேந்தி ஆகியோர் கைது செய்யப்பட்டனர். இவர்கள் மீதான வழக்கு விசாரணை கடலூர் கோர்ட்டில் நடந்து வருகிறது.

வீரப்பனை அடுத்து அவரது மைத்துனரான சாமு என்ற சாம்பசிவம் (வயது 36) இளைஞர் காங்கிரஸ் பொறுப்பாளராக இருந்து வந்தார். இவரும் கட்சிப் பணியில் தீவிரம் காட்டினார். அமைச்சர் கந்தசாமியின் ஆதரவாளராக இருந்தார்.

வீரப்பன் கொலை வழக்கு விசாரணைக்கு வர உள்ளதால் முக்கிய சாட்சியான சாம்பசிவத்தின் நடவடிக்கைகளை அமுதன், சூர்யா தரப்பினர் கண்காணித்து வந்தனர். இதுகுறித்து சாம்பசிவத்தை அழைத்து போலீசாரும் கவனமாக இருக்குமாறு எச்சரித்தனர்.

இந்தநிலையில் சாம்பசிவத்தின் தங்கைக்கு வருகிற 7-ந் தேதி (வெள்ளிக்கிழமை) திருமணம் நடத்த நிச்சயிக்கப்பட்டு இருந்தது. இதையொட்டி அதற்கான வேலைகளில் சாம்பசிவம் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். உறவினர்கள், நண்பர்களுக்கு திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்காக நேற்று காலை வீட்டில் இருந்து சாம்பசிவம் காரில் புறப்பட்டார். காரை கந்தன்பேட்டை சேர்ந்த டிரைவர் ஜெயப்பிரகாஷ் (23) ஓட்டினார். உறவினர் ராஜதுரையும் உடனிருந்தார்.

முதலில் ஈச்சங்காடு சென்று பத்திரிகை வைத்து விட்டு புதுச்சேரிக்கு அவர்கள் திரும்பி வந்து கொண்டிருந்தனர். காலை சுமார் 8.30 மணியளவில் கிருமாம்பாக்கம் அரசு பள்ளி அருகே இருந்த வேகத்தடையை கடந்த போது அங்கு பதுங்கி இருந்த மர்ம கும்பல் திடீரென காரை வழிமறித்தது.

திடீரென அவர்களில் ஒருவர் காரை நோக்கி வெடிகுண்டுகளை வீசினார். அந்த குண்டு சுவற்றில் விழுந்து வெடித்தது. விபரீதத்தை உணர்ந்த ராஜதுரை, டிரைவர் ஜெயப்பிரகாஷ் ஆகிய இருவரும் காரை அங்கேயே நிறுத்தி விட்டு வெளியே வந்தனர்.

காரில் இருந்த சாம்பசிவத்தை அந்த கும்பல் வெளியே இழுத்துப் போட்டு தலை, முதுகு, கைகளில் சரமாரியாக வெட்டியது. இதன்பின் அந்த கும்பலை சேர்ந்தவர்கள் அங்கிருந்து மோட்டார் சைக்கிள்களில் ஏறி மெயின் ரோட்டுக்கு சென்று தப்பினர். அரிவாள் வெட்டில் படுகாயமடைந்த சாம்பசிவம் மூளை சிதறி சம்பவ இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார்.

காலை நேரத்தில் நடந்த இந்த பயங்கர சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த வழியாக வந்த பொதுமக்களும், பள்ளி குழந்தைகளும் அலறியடித்து ஓட்டம்பிடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இந்த சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும் சாம்பசிவத்தின் உறவினர்களும், நண்பர்களும் அங்கு திரண்டு வந்தனர். கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம் காங்கிரஸ் பிரமுகர்களும் அங்கு குவிந்தனர். சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அகன்சியா யாதவ், சூப்பிரண்டுகள் ரங்கநாதன், ஜிந்தா கோதண்டராமன் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.

சாம்பசிவத்தின் உடலை மீட்டு ஆம்புலன்சில் ஏற்றி பிரேத பரிசோதனைக்காக போலீசார் அரசு ஆஸ்பத்திரிக்கு எடுத்துச் செல்ல முயன்றனர். இதை தடுத்ததால் போலீசாருக்கும் அவர்களுக்கும் தள்ளு -முள்ளு ஏற்பட்டது. பின்னர் கிருமாம்பாக்கம் சந்திப்புக்கு வந்த சாம்பசிவத்தின் உறவினர்கள் கொலையாளிகளை கைது செய்யக் கோரி புதுவை-கடலூர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. கொலையாளிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என போலீசார் உறுதி அளித்த பின்னரே சாலைமறியலில் ஈடுபட்டவர்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

இந்த பயங்கர சம்பவம் குறித்து கிருமாம்பாக்கம் போலீசில் சாம்பசிவத்தின் உறவினர் ராஜதுரை புகார் செய்துள்ளார். அதில் கிருமாம்பாக்கம் அமுதன், கூடப்பாக்கம் அன்பு என்ற அன்பரசன், கெவின், மணிமாறன், சார்லஸ், மற்றொரு நபர் என 6 பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டதாக தெரிவித்துள்ளார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக உள்ள அவர்களை தேடி வருகிறார்கள். இந்த பயங்கர கொலை சம்பவத்தால் பதற்றம் ஏற்பட்டுள்ளதையொட்டி கிருமாம்பாக்கத்தில் போலீசார் பாதுகாப்புக்கு குவிக்கப்பட்டுள்ளனர்.

நேற்று அமைச்சர் கந்தசாமியின் பிறந்த நாள் ஆகும். தற்போது அவர் டெல்லி சென்றுள்ளார். தனது ஆதரவாளர் சாம்பசிவம் வெடிகுண்டு வீசி கொலை செய்யப்பட்டிருப்பதை அறிந்து அவரும் அதிர்ச்சி அடைந்தார். கந்தசாமியின் பிறந்தநாளையொட்டி கிருமாம்பாக்கம் பகுதியில் செய்யப்பட்டிருந்த விழா ஏற்பாடுகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டன.-Source: dailythanthi

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!