பொள்ளாச்சி பாலியல் வழக்கு விசாரணையில் நடப்பது என்ன..?


பொள்ளாச்சி பாலியல் வழக்கில் கைதான 5 பேர் மீதான விசாரணை வேறு கோர்ட்டுக்கு மாற்றப்பட்டுள்ளது. கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அடுத்த மாதம் 11-ந்தேதி இந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது.

பொள்ளாச்சியில் இளம்பெண்கள், கல்லூரி மாணவிகளை பாலியல் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய சம்பவம் சமூக வலைதளங்களில் பரவி, தமிழகத்தை உலுக்கியது.

இது தொடர்பாக பாதிக்கப்பட்ட கல்லூரி மாணவி ஒருவர் பொள்ளாச்சி மகளிர் போலீசில் புகார் செய்தார். இதன் பேரில் பொள்ளாச்சியை சேர்ந்த திருநாவுக்கரசு(வயது27), சபரிராஜன்(25), சதீஷ்(25), வசந்தகுமார்(25) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.

இந்த நிலையில் புகார் கொடுத்த மாணவியின் சகோதரரை தாக்கியதாக மணிவண்ணன்(27) என்பவர் கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட 5 பேரும் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டு இருந்தனர். பின்னர் சேலம் சிறைக்கு மாற்றப்பட்டனர்.

பாலியல் வழக்கை முதலில் பொள்ளாச்சி போலீசாரும், பின்னர் சி.பி.சி.ஐ.டி போலீசாரும் விசாரித்தனர். அதன் பின்னர் சி.பி.ஐ.க்கு மாற்றப்பட்டது. சி.பி.ஐ. அதிகாரிகள் கோவை மற்றும் பொள்ளாச்சியில் முகாமிட்டு தீவிர விசாரணை நடத்தினார்கள்.

இந்த வழக்கில் கடந்த மே மாதம் கோவை மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் சி.பி.ஐ. அதிகாரிகள் 1,000 பக்க குற்ற பத்திரிகையை தாக்கல் செய்தனர். இதனைத்தொடர்ந்து இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. கைது செய்யப்பட்ட 5 பேரும் பலத்த பாதுகாப்புடன் சேலம் மத்திய சிறையில் இருந்து கோவை அழைத்து வரப்பட்டனர்.

குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் மாவட்ட தலைமை குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தினார்கள். பின்னர் நீதிபதி, ‘இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரம் மாவட்ட முதன்மை அமர்வு நீதி மன்றத்திற்குதான் உள்ளது’ என கூறி விசாரணையை மாவட்ட அமர்வு நீதி மன்றத்திற்கு மாற்றி உத்தரவிட்டார்.

தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் அதிகபட்சம் 7 ஆண்டுகள்தான் சிறை தண்டனை விதிக்க முடியும். பாலியல் குற்ற வழக்காக இருப்பதாலும், அதிகபட்ச தண்டனை விதிக்க வாய்ப்பு இருப்பதாலும் இந்த வழக்கு மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டுள்ளது. எனவே இந்த வழக்கு விசாரணை மேலும் துரிதமாக நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அடுத்த மாதம் 11-ந்தேதி இந்த வழக்கு விசாரணை நடைபெறுகிறது.-Source: maalaimalar

* இந்த பதிவு உங்களுக்கு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். நன்றி!